Submission of report to CM MKstalin regarding flood risk reduction in Chennai Metropolitan
சென்னை பெருநகர வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முனைவர் வி.திருப்புகழ், இ.ஆ.ப., (ஓய்வு) சமர்ப்பித்தார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக முனைவர் வெ.திருப்புகழ், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் நியமிக்கப்பட்டார். அக்குழுவினர் சென்னை பெருநகர பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் எடுக்கப்பட வேண்டிய வேண்டிய நடவடிக்கைகள் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று (14.3.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை, ஆலோசனைக் குழுத் தலைவர் முனைவர் வி.திருப்புகழ், இ.ஆ.ப., (ஓய்வு) முதல்வரிடம் சமர்ப்பித்து, அறிக்கையின் விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த சந்திப்பிற்கு பின், தமிழக முதல்வர் குறிப்பிட்டவை பின்வருமாறு-
ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனாவை சமாளிக்க, அரசு முழு வேகத்தில் செயல்பட்டது. அதன் பிறகு, உடனே பெருமழை காரணமாக அரசுக்கு ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அதனை எதிர்கொண்டவுடன், இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, திருப்புகழ் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நானும், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து மேற்பார்வை செய்து பணிகளை 80 சதவீதம் முடித்ததால், அரசுக்கு கடந்த மழையின்போது தண்ணீர் தேங்காமல் மிகப்பெரிய நல்ல பெயர் கிடைத்தது.
அந்த நற்பெயருக்கு முக்கிய காரணங்களில் ஒன்று திருப்புகழ் கமிட்டியின் செயல்பாடுகள். இதற்கு முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இந்த வெள்ளப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண உழைத்திட்ட திருப்புகழ் அவர்களுக்கும், குழுவின் உறுப்பினர்கள் திருவாளர்கள் ஜனகராஜ், அறிவுடைநம்பி, இளங்கோ, பாலாஜி நரசிம்மன், காந்திமதிநாதன், ராஜா, முருகன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் அவர்களை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். நம்முடைய அரசு என்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. தொடர்ந்து அரசுடன் நீங்கள் இது தொடர்பாக எந்த நேரத்திலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் சென்னை பெருநகர வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா,இ.ஆ.ப., சுற்றுச்சூழல், ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
விவசாயிகள் தற்கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல- சர்ச்சையில் சிக்கிய வேளாண் அமைச்சர்
தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர்