நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் வட்டார, தோட்டக்கலைத் துறையில், 2023–24ம் ஆண்டில் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, செல்லப்பம்பட்டி, பாச்சல், காரைகுறிச்சிபுதூர் மற்றும் தாத்தையங்கார்பட்டி ஆகிய 4 கிராமங்கள் இந்த ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், தோட்டக்கலைத்துறைக்கு, செல்லப்பம்பட்டி, பாச்சல் ஆகிய கிராமங்களும், வேளாண் துறைக்கு, காரைக்குறிச்சிபுதூர், தாத்தையங்கார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வருவாய் கிராமங்களில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த, 3 ஆண்டுகளாக சாகுபடி செய்யாத நிலம் மற்றும் தொகுப்பாக உள்ள தரிசு நிலங்களை கண்டறிந்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து, நிலங்களை சமன் செய்து, ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து, அந்த நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரப்படும்.
மேலும், பாரத பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியத்திலும், துணை நீர் மேலாண் திட்டத்தில், நீர் தொட்டி அமைத்தல், பைப் லைன் அமைத்தல் மற்றும் மின் மோட்டார் போன்ற இனங்களுக்கு, 50 சதவீதம் மானியத்தில், சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், காய்கறி மற்றும் பழப்பயிர்கள் சாகுபடி விரிவாக்கம், துள்ளியப் பண்ணையத் திட்டம் மற்றும் அங்கக வேளாண் போன்ற இனங்களில், 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில், காய்கறி விதைகள் மற்றும் குழித்தட்டு நாற்றுகள், தக்காளி, கத்தரி, மிளகாய் மற்றும் பழக்கன்றுகள் (ஒட்டுசெடிகள்), வெங்காய சேமிப்பு கிடங்கு அமைத்தல் போன்ற பணிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள், புதுச்சத்திரம் வட்டார தோட்டககலைத் துறையை அணுகி பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கார்த்திக், ராமநாதன் மற்றும் புவித்ராவை, 9629656185, 78451 98881, 80560 67220 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல் பெறலாம்.
மேலும் படிக்க: