தமிழக மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தினமும் சராசரியாக, 5,500 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது.
மின்சாரத் தேவை (Need Electricity)
தமிழக மின் தேவை எவ்வளவு இருக்கிறதோ, அதற்கு ஏற்ற அளவுக்கு உற்பத்தி, கொள்முதல் ஆகிய இரண்டையும் சமன் செய்து, மின் வழித்தட கட்டமைப்பில், மின்சாரத்தை எடுத்து செல்ல வேண்டும். இதற்காக, அடுத்த நாள் எவ்வளவு மின்சாரம் வழங்கப்படும் என்பதை பெற்று, தென் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், முந்தைய நாளே மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்திடம் வழங்கும். தென் மாநில மையத்தின் அலுவலகம், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ளது. எவ்வளவு மின்சாரம் வழங்கப்படும் என்ற அளவு, ஒவ்வொரு, 15 நிமிடங்களுக்கு அட்டவணைப்படுத்தி, தமிழக மின் பகிர்ந்தளிப்பு மையத்திடம் வழங்கப்படும்.
மின் நுகர்வு (Power consumption)
புதிதாக வழங்கப்பட்ட ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பால், தினசரி மின் தேவை கூடுதலாக, 350 மெகா வாட் அதிகரித்துள்ளது. இயல்பு நிலைதமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை வந்ததால், பலரும் சுற்றுலா மையங்களுக்கு சென்றனர். இதனால் மின் தேவை, 3,000 மெகா வாட் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று முன்தினம் காலை முதல் மின் தேவை, 16 ஆயிரம் மெகா வாட் மேல் இருந்தது. நேற்று முன்தினம் மதியம் முதல், கடலுாரில் உள்ள என்.எல்.சி., 2, கர்நாடகாவில் உள்ள குட்கி உள்ளிட்ட அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுதால், 750 மெகா வாட் மின்சாரம் கிடைக்கவில்லை.
இது தவிர, திருவள்ளூரில் உள்ள வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தில், 600 மெகா வாட் திறன் உடைய இரண்டாவது அலகில், தொழில்நுட்ப கோளாறால் உற்பத்தி பாதிக்கப்பட்டது துாத்துக்குடி மின் நிலையத்தில், 210 மெகா வாட் திறன் உடைய இரு அலகுகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அதேசமயம், மின் தேவை அதிகம் இருந்ததால், அதை பூர்த்தி செய்ய, மின்சார சந்தையில் இருந்து உடனடியாக, 1,000 - 1,200 மெகா வாட் கொள்முதல் செய்யும் நடவடிக்கையில், மின் வாரியம் ஈடுபட்டது. ஆனால் அந்த சமயத்தில், தென் மாநிலங்கள் அனைத்திலும் தேவை அதிகரித்ததால், மின்சாரம் கிடைக்கவில்லை. மின் தேவை அதிகம் உள்ள நிலையில், அதற்கு இணையான அளவுக்கு உற்பத்தியும், கொள்முதலும் இல்லை.
இதனால் மின் வழித்தட கட்டமைப்பில் பழுது ஏற்படாமல் இருக்க, மின் தேவையை குறைக்குமாறு, தென் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், தமிழக மின் வாரியத்தை அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதன் விளைவாக, பல மாவட்டங்களில், நேற்று முன்தினம் மாலை நள்ளிரவு வரை மின் தடை ஏற்பட்டது. இரவு, 9:55 மணிக்கு வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு, மீண்டும் உற்பத்தி துவங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் சில மாநிலங்களில் தேவை குறைந்ததால், மின்சார சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டது. அதன் காரணமாக, நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு படிப்படியாக மின் வினியோகத்தில் இயல்பு நிலை திரும்பியது.
அமைச்சர் விளக்கம் (Ministerial Description)
மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம், 750 மெகா வாட் திடீரென தடைபட்டது. இதன் காரணமாக, சில இடங்களில் ஏற்பட்ட மின் பற்றாக்குறையை சமாளிக்க, வாரியத்தின் உற்பத்தித் திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால், நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரக பகுதிகளிலும் அடுத்த, 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேலும் படிக்க