பெங்களூரு நகரின் முக்கிய சாலையில் மழை போன்று பணம் கொட்டியதால் மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அங்கிருந்த சிலர் அங்கிருந்த பணத்தை கிடைத்த வரைக்கும் லாபம் என்று அள்ளிச்சென்றனர். மேலும் பலர் சிதறி கிடந்த பணத்தை எடுக்க முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் இவை போலி ரூபாய் நோட்டாக இருக்கும் என்று நினைத்தனர். ஆனால் கொட்டி தீர்த்த ரூபாய் நோட்டு அனைத்தும் அசல் என்பதால் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த சம்பவம் பெங்களூருவின் கே.ஆர்.மார்க்கெட்டில் நடைபெற்றது. ஆனால் பெய்தது பணமழை அல்ல, மேம்பாலத்தின் மீது நின்று ஒருவர் ரூபாய் நோட்டுகளை வீசியுள்ளார்.
பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் அடையாளம் தெரியாத கோட் அணிந்த நபர் ஒருவர் தனது பைக்கை நிறுத்திவிட்டு பையில் இருந்து ரூபாய் நோட்டுகளை வீசியுள்ளார். கழுத்தில் கடிகாரம் அணிந்திருந்த நபரின் செயல் விசித்திரமாக இருந்தது. பாலத்தின் கீழ் இருந்தவர்கள் ரூபாய் நோட்டுகளை அள்ளிச்சென்றனர்.
மர்ம நபர் 3000 மதிப்பிலான 10 ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக வீசியுள்ளார். பாலத்தின் இருபுறங்களுக்கு சென்று அவர் ரூபாய் நோட்டுகளை வீசும் வீடியோவை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். ரூபாய் நோட்டுகளை எடுக்க அங்கிருந்தவர்கள் போட்டி போட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்மந்தப்பட்ட இடத்திற்கு வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். ரூபாய் நோட்டுகளை வீசியது யார், இதற்கு என்ன காரணம் என்பதை வீடியோவை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: