News

Tuesday, 25 March 2025 05:43 PM , by: Harishanker R P

A sugarcane farmer reaping crops in Maharashtra (Pic credit: Pexels)

மகாராஷ்டிராவின் பாராமதி பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகள் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர். இது நல்ல பலனை அளித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் உள்ளது நிம்புட் கிராமம். இங்குள்ள சுரேஷ் ஜெகதாப் 65 என்ற விவசாயி பல ஆண்டு காலமாக தனது நிலத்தில் காய்கறி மற்றும் பழங்களை விவசாயம் செய்து வந்தார். இங்குள்ள வேளாண் மேம்பாட்டு அறக்கட்டளையில் உள்ள விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பு விவசாயிகளுக்கு வேண்டிய தகவலை அளித்து வருகின்றனர். இதனால் சுரேஷ் ஜெகதாப் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் கரும்பு விவசாயத்தில் இணைந்துள்ளார்.

இவரது நிலமே தற்போது வானிலை மையம் போல் செயல்படுகிறது. இங்கு உயரமான கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சென்சார்கள் காற்று, மழை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றை அளவிடுகின்றன. மண்ணுக்கு அடியில் உள்ள சென்சார்கள் மண்ணின் ஈரப்பதம், அமிலத்தன்மை, ஊட்டச்சத்து ஆகியவற்றை அளவிட்டு தகவல் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் செயற்கை கோள் மற்றும் டிரோன் படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெறப்படும் தகவல்கள் விவசாயிகளுக்கு செல்போன் செயலி வழியாக தெரிவிக்கப்படுகின்றன.

அதிக தண்ணீர் பாய்ச்சுவது, உரம் போடுவது, பூச்சிகள் தாக்கத்தை பரிசோதனை செய்வது போன்ற தகவல்கள் விவசாயிகளுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படுகின்றன. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் பெறப்படும் தகவல்களை பின்பற்றும் விவசாயிகளின் நிலத்தில் கரும்பு நன்றாக வளர்கிறது. கரும்பின் தோகைகள் பசுமையாக உள்ளன. கரும்பு நன்கு உயரமாகவும், தடிமனாகவும் உள்ளது. இவர்கள் அக்டோபர் அல்லது நவம்பரில் நன்கு விளைந்த கரும்பை அறுவடை செய்யவுள்ளனர்.

ஏற்கெனவே நடத்தப்பட்ட பரிசோதனையில் அறுவடை நேரத்தில் கரும்பின் எடை 30 முதல் 40 சதவீத கூடுதல் எடையுடனும், சுக்ரோஸ் அளவு 20 சதவீத கூடுதலாக இருந்தது. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளும் கரும்பு விவசாயத்துக்கு குறைந்த தண்ணீர், உரம் மட்டுமே செலவாகிறது. 12 மாதத்தில் கரும்பு, நோய் தாக்குதல் இன்றி நன்கு வளர்ச்சியடைந்து அறுவடைக்கு தயாராகிறது.

ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளும் விவசாயம் குறித்து வேளாண் மேம்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த பிரதாப் பவார் கூறுகையில், ‘‘ எதிர்கால விவசாயம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் ஏஐ தொழில்நுட்ப திட்டத்தை , கரும்பு, தக்காளி உட்பட பல பயிர்களின் விவசாயத்தில் பயன்படுத்துகிறோம்’’ என்றார். நுண்ணுயிரியல் விஞ்ஞானி டாக்டர் யோகேஷ் கூறுகையில், ‘‘தண்ணீர், பருவநிலை, ஊட்டச்சத்து, மண்ணின் தன்மை குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். அதன் அடிப்படையில் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு நல்ல பயன் கிடைக்கிறது’’ என்றார்.

ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளும் விவசாய திட்டத்தில் சுமார் 20,000 விவசாயிகள் இணைந்துள்ளனர். இவர்களில் 1000 பேர் முதல் கட்ட பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது கரும்பு விவசாயத்தில் கவனம் செலுத்துகின்றனர். இவர்களில் 200 பேர் கரும்பு விவசாயத்தை 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டனர்.

Read more: 

தமிழ்நாடு வேளாண்மை துறை மூலம் தரமற்ற விதை- 90% மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்பு

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் முறியடிப்பு: ஹரியானாவில் தடுப்புகள் நீக்கம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)