இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” விழுப்புரம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் வீரிய ஒட்டு காய்கறிகளான கத்தரி, மிளகாய், தக்காளி, குழித்தட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு ஹெக்டர் ஒன்றுக்கு 15 ஆயிரம் நாற்றுகள், இடுபொருட்கள் சேர்த்து ஒரு ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலும், பழப்பயிர்கள் கொய்யா அடர் நடவுக்கான கொய்யா பதியன்கள், திசு வாழைக்கன்றுகள், பப்பாளி செடிகள், எலுமிச்சை பதியன்கள், அத்தி, நெல்லி, பலா ஒட்டுச்செடிகள் ஆகியவையும், இதற்கான இடுபொருட்களும் 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
மேலும், மல்லிகைச்செடிகள், சாமந்தி குழித்தட்டு நாற்றுகள், நறுமண பயிர்கள், மிளகாய் நாற்றுகள், மலைத்தோட்ட பயிரான முந்திரி, சாதாரண நடவுக்கான செடிகள், அதற்கான இடுபொருட்களும் 40 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.பயிர்களில் நீர், களை மேலாண்மைக்கான நிலப்போர்வைகள் 50 சதவீத மானியத்திலும், மண்புழு உரம் தயாரிக்க நிரந்தர மண்புழு உரப்படுக்கைக்கான மானியம் 50 சதவீதமும், தேனீ வளர்ப்புக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளன.
அங்கக வேளாண்மை சாகுபடி செய்து வரும் குழுக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர மினி டிராக்டர், பவர்டில்லர்கள் பின்னேற்பு மானியத்தில் வழங்கப்பட உள்ளன. நகரும் காய்கனி தள்ளுவண்டிக்கு 50 சதவீத பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விவசாயிகள்,https://tnhorticulture.tn.gov.in/ என்ற தோட்டக்கலைத்துறை இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்த ஆண்டு 183 கிராமங்கள் அரசாங்கத்தினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 80 சதவீத இலக்கீடு அந்த கிராமங்களில் செயல்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: