வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையென்றால் அதனை நாங்கள் செய்வோம் என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு (Agricultural Laws) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தை தோல்வி
வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை 11-ந் தேதிக்கு (இன்று) தள்ளி வைப்பதாக கூறினர். மத்திய அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால், கடந்த 7-ந் தேதி நடந்த மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையிலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக மனு:
3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே (S.A. Popte) தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. இவற்றின் மீது நடந்த விசாரணையில், வேளாண் சட்டங்கள் பற்றிய விவகாரம் நடத்தப்படும் விதம் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. என்ன பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என எங்களுக்கு தெரியவில்லை? இந்த சட்டங்களை சில காலத்திற்கு தள்ளி போடலாமா? என தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கேள்வி எழுப்பினார். சிலர் தற்கொலை செய்துள்ளனர். வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனர். என்ன நடந்து கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என கடிந்து கொண்டார்.
ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு
வேளாண் சட்டங்கள் குறித்த ஆய்வு செய்ய நிபுணர்களின் குழுவை அமைக்க உத்தரவிட்ட நிலையில், விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் புதிய வேளாண் சட்டங்களை பகுதிகளாக அமல்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து உத்தரவுகளை பிறப்பிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பிரச்னைகளுக்கு தீர்வு (Solution) காண குழு அமைக்கவும் தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இக்குழுவில் இருதரப்பு கருத்துகளையும் கேட்க இருப்பதாகவும் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் நீதிபதி கேட்டுக்கொண்டார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு வீடு திரும்புமாறு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே "பிரச்சினையின் இணக்கமான தீர்வை எங்களால் கொண்டு வர முடியுமா என்பதைப் பார்ப்பதே எங்கள் நோக்கம்.
நாங்கள் செய்வோம்
நீங்கள் ஏன் (மத்திய அரசு) வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கவில்லை? கொஞ்சம் பொறுப்புணர்வு (Accountability) இருந்தால், நாங்கள் சட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று நீங்கள் கூறலாம். வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் என கூறினார். மத்தியரசின் இரண்டாவது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாட்டின் பெரும்பான்மையான விவசாயிகள் இந்த வேளாண் சட்டம் தங்களுக்கு நன்மை பயக்கும் என்று கூறியுள்ளனர். அதற்கு நீதிமன்றம் "இந்த சட்டம் நன்மை பயக்கும் என்று பெரும்பான்மையானவர்கள் நினைத்தால், அவர்கள் குழுவிடம் சொல்லட்டும்". விவசாயிகளின் கவலைகள் கேட்கப்படும் என்று உறுதியளித்த சுப்ரீம் கோர்ட் (Supreme court) தனது கடமையை நிறைவேற்றும் என்று எஸ்.ஏ.போப்டே கூறினார். "உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்
இந்த குழுவில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) நிபுணர்கள் இடம்பெறுவார்கள். வேளாண் சட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு தீர்வு காணும் சாத்தியத்தை ஆராய்வதற்காக ஆர்.எம்.லோதா (R.M. Lotha) உள்ளிட்ட முன்னாள் தலலைமை நீதிபதிகள் பெயர்களை தலைமை குழுவுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.
தயவுசெய்து எங்களுக்கு பொறுமை குறித்து சொற்பொழிவு செய்ய வேண்டாம். பேச்சுவார்த்தையை மூலம்பிரச்சினையை தீர்க்க நீதிமன்றம் அரசாங்கத்திற்கு போதுமான நேரத்தை வழங்கியது,
ஆனால் அது வேளாண் சட்டங்களில் பிடிவாதமாக உள்ளது. பிரச்சினையையும் விவசாயிகளின் போராட்டத்தையும் மத்திய அரசால் தீர்க்க முடியவில்லை என்று நாங்கள் வருந்துகிறோம்.நீங்கள் தீர்வின் ஒரு பகுதியா அல்லது பிரச்சினையின் ஒரு பகுதியா என்பது எங்களுக்குத் தெரியாது என கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நெல்கொள்முதல் நிலையங்களுக்கு பொறுப்பாளர்களாக விவசாயிகளை நியமிக்க வேண்டும்! விவசாயிகள் வலியுறுத்தல்!