காபி துாள் விலை இதுவரை இல்லாத அளவுக்கு, உச்சத்தை தொட்டு உள்ளது. 'பியூர்' காபி துாள் கிலோ 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், நடுத்தர வர்க்கத்தினர் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். உலக அளவில் காபியின் நுகர்வு அதிகரித்து செல்கிறது. இதற்கான காபி கொட்டை 70 நாடுகளில் உற்பத்தி (Production) செய்யப்படுகிறது. உலக அளவில் காபி உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக பிரேசில் உள்ளது. இங்கு 18 லட்சம் ஹெக்டேரில் காபி பயிரிடப்படுகிறது.
உற்பத்தி அதிகரிப்பு
உலகின் காபி தேவையில் பாதியளவை பிரேசில் பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, திரிபுரா, நாகலாந்து, அசாம், மேகாலயா மாநிலங்களில் காபி பயிரிடப்படுகிறது. இங்கு நடப்பாண்டு, ஒரு லட்சத்து 8,300 டன், 'அராபிகா' வகை காபியும், 2 லட்சத்து 60 ஆயிரத்து 700 டன், 'ரொபாஸ்டா' வகை காபியும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
சுவை, மணம் ஆகியவற்றுக்கு அராபிகா வகை காபியும், திடத்துக்கு ரொபாஸ்டா காபியும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவை பொறுத்த வரை கடந்த ஆண்டை காட்டிலும், 10 சதவீதம் வரை காபி உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த மாதம், பிரேசிலில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்கு 2 லட்சம் ஹெக்டேரில் காபி பயிர் முழுதும் பாதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தி வெகுவாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அராபிகா வகை காபிக்கு உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு முன் வரை, கிலோ 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அராபிகா காபி கொட்டை விலை, தற்போது 380 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், பில்டர் காபி முதல், 'இன்ஸ்டன்ட்' காபி வரை, அனைத்து வகை காபி துாள்களும் விலையேற்றம் கண்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில், பியூர் காபி துாள் கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், தினமும் காபியில் கண் விழிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, அதன் விலையேற்றம் கடும் கசப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, சேலம் லட்சுமி காபி மற்றும் ஓட்டல்ஸ் நிர்வாக இயக்குநர்கள் குமார், பிரபு கூறியதாவது: இந்தியாவில் உற்பத்தி ஆகும் அராபிகா வகை காபியில், 80 சதவீதம் ஏற்றுமதியாகிறது. பிரேசிலில் பனிப்பொழிவு பாதிப்பு காரணமாக உலகளவில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், இதுவரை இல்லாத அளவுக்கு காபி கொட்டை விலை உச்சத்தை தொட்டு உள்ளது. கடந்த பருவத்தை விட 60 சதவீத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் வரை, இதே நிலை நீடிக்கவோ, இன்னும் விலை அதிகரிக்கவோ வாய்ப்பு உள்ளது.
தட்டுப்பாடு
தட்டுப்பாடு காரணமாக பலரும் விலையேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். 380 ரூபாய்க்கு விற்கப்படும் கிலோ காபி கொட்டையை வறுக்கும் போது 800 கிராம் காபி துாள் மட்டுமே கிடைக்கும். அதனால், கிலோ பியூர் காபி 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எங்களிடம் இருப்பு இருப்பதால், விலையேற்றம் செய்யாமல், பியூர் காபி கிலோ 420 ரூபாய்க்கும், 80:20 கலவை 364 ரூபாய்க்கும், 60:40 கலவை 308 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம் என்று அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க