
தமிழகத்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து வரும் மாணவர்களின் உயிரிழப்பு விவகாரத்தில் விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில், அடுத்தடுத்த சம்பவங்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளன.
படிப்பைத் தொடர முடியாததால் மரணம்
விழுப்புரம் மாவட்டம் கண்டச்சிபுரம் எஸ்.பில்ராம்பட்டு பகுதியை சேர்ந்த நல்லேந்திரன், சுதா தம்பதியர். இவர்கள் இருவருமே விவசாய கூலி மற்றும் செங்கல் சூளையில் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முதல் இரண்டு பிள்ளைகளும் கல்லூரி முடித்துவிட்டு வேலை செய்து வருகின்றனர்.
மூன்றாவதாக இருக்கும் மகள், கண்டச்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இதனிடையே மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்த மகளை மேற்கொண்டு படிக்க வைக்க முடியாத சூழலில் பெற்றோர் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடும்ப பொருளாதார சூழலும் அதற்கு காரணமாக இருந்துள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில் பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர் பெற்றோர். குறிப்பாக திருமணம் செய்து கொண்டு மேல்படிப்பைத் தொடரும்படி பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் திருமணத்தில் விருப்பம் இல்லாத அவர் தன்னால் மேற்படிப்பு படிக்க முடியவில்லை என்ற மன வேதனையில் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெற்றோர் திட்டியதால் மாணவர் தற்கொலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் சுடர் ராஜ்-மேகலா தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுடைய இளைய மகன் சாக்கோட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
கொரோனா பொதுமுடக்கத்துக்குப்பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மாணவரால் சரிவர படிக்க முடியவில்லை. இதனால், பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது மாணவனின் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி சென்று திரும்பிய மாணவி தற்கொலை
- சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி பகுதியில், பள்ளி சென்று வீடு திரும்பிய 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
- சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரும் இவரது மனைவியும் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
- இவர்களது இரண்டாம் மகள் அய்யம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு மாணவி வந்துள்ளார்.
- பின்னர், மாணவியின் பாட்டி வெளியே சென்று வீடு திரும்பிய இடைவெளியில், அதற்குள்ளாக மாணவி தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
- இதுகுறித்து மாறனேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
- அய்யம்பட்டி பகுதியில் பள்ளி சென்று திரும்பிய மாணவிதற்கொலை செ ய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க