News

Thursday, 12 September 2019 01:03 PM

தமிழகத்திற்கு மீண்டுமொரு புவிசார் குறியீடு அறிவிக்கப் பட்டுள்ளது. பாரம்பரியம், வட்டாரம் சார்ந்த தனித்துவம் போன்ற காரணங்களால் அந்தந்த பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது. அந்த வகையில் 80 ஆண்டுகளுக்கு மேல் சுவையும், தனித்துவமும் மாறாமல் இருக்கும் உலக புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 1940ம் ஆண்டு முதல் பால்கோவா தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்  சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வழங்க கோரி விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் விண்ணப்பத்திற்கு எதிர்ப்பு எதுவும் இல்லாதததால் புவிசார் குறியீடு விரைவில் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெறப்படும் பசும்பால் மூலமாக மட்டுமே இதனை தயாரிக்கின்றனர். இயற்கையாகவே இங்கு கறக்கப் படும் பால் இனிப்புச் சுவையுடன் இருப்பதால், பால்கோவா செய்வதற்கு சிறிதளவு சர்க்கரையே தேவைப்படும் எனவும்,  இந்த பால்கோவா 10 – 15 நாள் வரை  கெட்டு போகாது இருக்கும் எனவும் உற்பத்தியாளர்கள் கூறினார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

10 லிட்டர் பாலில் இருந்து 3.250 முதல் 3.500 கிலோ கிராம் வரை பால்கோவா தயாரிக்க படுகிறது. இதற்கு 1.25 கிலோ கிராம் சர்க்கரை தேவைப்படும் என கூறினார்கள். இதை தயாரிக்க பிரத்யேகியமாக  புளிய மரத்தின் விறகை பயன் படுத்துகிறார்கள். இதன் மிதமான வெப்பம் பால்கோவா தயாரிப்பதற்கு எதுவாக இருப்பதாக கூறப்படுகிறது.

தினமும் 1000 லிட்டர் பால் வரை கூட்டுறவு சங்கங்கள், விற்பனையாளர்கள் மூலம் பெறப்பட்டு பால்கோவா தயாரிக்கப் படுகிறது. திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் 2000 முதல் 3000 லிட்டர் பால் தேவைப்படும் என்கிறார்கள். 3000 அதிகமான மக்கள் இந்த தொழில் ஈடுபட்டு வருகின்றனர். சுத்தமான ஒரு கிலோ பால்கோவாவின் விலை ரூ 260 வரை விற்கப்படும் என அத்தொழில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.

தமிழகத்திற்கு  இதுவரை 31 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் தமிழகத்தின் புவிசார் குறியீடு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கான சந்தை விரிவடைந்துள்ளது எனலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)