தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆராய்ச்சி இயக்ககம் சார்பில், நடப்பாண்டில், 20 புதிய பயிர் ரகங்களை கண்டறியப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் சார்பில் புதிய பயிர் ரகங்கள் அறிமுகப் படுத்தப்படும். கடந்த ஆண்டு 14 புதிய பயிர் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பின் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அரசு பொங்கலுக்கு புதிய பயிர் ரகங்கள் வெளியிடுவது வழக்கம். அதே போன்று இவ்வாண்டும் ஒப்புதலுக்கு 20 புதிய பயிர் ரகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நடப்பு கல்வியாண்டின் புதிய ரக கண்டுபிடிப்புகளின் மாதிரிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட ஆய்வில் தகுதி பெறும் கண்டுபிடிப்புகள், மாநில அரசின் ஒப்புதல் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின் தகுதி பெறும் ரகங்கள் பொங்கல் பண்டிகை தினத்தினை முன்னிட்டு வெளியிடப்படும் என ஆராய்ச்சியில் ஈடுபட்ட துணைவேந்தர் தலைமையிலான சிறப்புக் குழுவினர் தெரிவித்தனர்.
புதிய கண்டுபிடிப்புகளில் காய்கறிகள், பழப்பயிர்கள், கரும்பு, நெல், பருத்தி போன்ற ரகங்கள் ஆராய்ச்சி செய்து ஆய்வுக்கு தயார்நிலையில் உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள நெய்பூவன் வாழைப்பழம் 'ஹெச்.212' புதிய ரக பட்டியலில் முக்கிய இடம் பெறும் என்கிறார்கள். இப்புதிய ரகம் குறித்து, பத்தாண்டிற்கு மேலாக இப்பல்கலையில் ஆய்வு செய்யப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால் அதிக இனிப்பு சுவையுடனும், ஒரு தார் 8 முதல் 10 கிலோ எடை இருக்கும். மேலும் பார்ப்பதற்கு கேரளா மட்டி பழம் போன்றும், வாடல் நோயை தாங்கி வளரக்கூடிய திறன் கொண்டதாகவும் இருக்கும்.
Anitha Jegadeesan
Krishi Jagran