கொரானா வைரஸ் தொற்று ஒருபுறம் அச்சுறுத்தி வரும் நிலையில், வட இந்தியாவில் முகாமிட்டுள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் விவசாய பயிர்களை சர்வநாசம் செய்து வருகிறது. இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என தமிழக வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.
பாலைவனப்பதிகளை ஒட்டிய ஈரான், ஆப்கானிஸ்தான், ஆகிய நாடுகளிலிருந்து உருவாகும் வெட்டுக்கிளிகளின் (Locust), ஆயுட்காலமானது 6 முதல் 8 வாரங்ளே, தனது ஆயுட் காலத்தில் மூன்று முறை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இந்த வெட்டுக்கிளிகள் அதிக தூரம் பறந்து செல்லும் திறண் கொண்டது. அறுவடைக்குத் தயாராக இருக்கும் வேளாண் பயிர்கள் எங்கு இருக்கும் என்பதையறிந்து, காற்றின் திசையில் பயணித்து அப்பயிர்களை உணவாக உட்கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 4 கோடி வெட்டுக்கிளிகள் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கும் எனவும், இவை ஒரே நாளில் 80,500 கிலோ பயிர்களை உணவாக உட்கொள்ளும். இது, நாள் ஒன்றுக்கு 35,000 மனிதர்கள் உண்ணும் அளவிற்கு சமமானது என வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த வெட்டுக்கிளிகளினால் ஏற்பட்டும் பாதிப்பு மிக மிக அதிகம்
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு
கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, தெற்கு ஈரானில் ஆகிய பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்திய பாலைவன வெட்டுக்கிளிகள், பாக்கிஸ்தான் மற்றும் இந்திய எல்லைப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐநா-வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
பொதுவாக, இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பானது பாகிஸ்தான் எல்லையையொட்டிய ராஜஸ்தான் மேற்கு பகுதி வரை மட்டுமே இருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஜெய்ப்பூர், மத்திய பிரதேசம் வரை நீண்டு பயிர்களை நாசம் செய்துள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் தாக்குதல், கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயிர் பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளின் கோரதாண்டவம்
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வெட்டுக்கிளிகளினால் 6,70,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், இதனால் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதேபோல், குஜராத், மத்தியபிரதேசம் ஆகிய பகுதிகளிலும் பயிர்களை நாசம் செய்து வருகிறது. தற்போது வட மாநிலங்களில் முகாமிட்டுள்ள இந்த வெட்டுக்கிளிகளால் தமிழக விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக வேளாண் துறை , விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் வராது
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு தக்காண பீடபூமியைத் தாண்டி தமிழகத்திற்கு வரும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும் வெட்டுக்கிளிகளின் நகர்வு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ள வேளாண் துறை, தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்பட்டால் அதனைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளையும் அறிவித்துள்ளது.
வெட்டுக்கிளிகள் தாக்குதலைத் தடுக்கும் முறைகள்
-
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பயிர்பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சி கொல்லிகள் மருந்தினை பயன்படுத்தலாம்
-
மாலத்தியான் ( Malathion ) மருந்தினை தெளிப்பான்கள், மற்றும் பெரிய டிராக்டர், மற்றும் தீ அணைக்கும் இயந்திரங்கள் மூலம் பரந்த அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்
-
உயிரியல் கட்டுப்பாடு காரணியாக மெட்டாரைசியம் அனிசோபிலே (Metarhizium Anisopliae) என்ற எதிர் உயிர் பூஞ்சாணங்கள் சாப்பிடும் கோழி மற்றும் பறவைகள் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்
-
அரசு அனுமதியிடம் பூச்சி மருந்தினை ஒட்டு மொத்த வான்வெளி தெளிப்பு மூலம் கட்டுப்படுத்தலாம் என்று வேளாண் துறை தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.