தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 18-ந் தேதி சட்டசபை விதி எண் 110-ன் கீழ் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்து உள்ளதாகவும், இதன்மூலம் நகரம், கிராமம் என அனைத்து வார்டு மக்களை நேரடியாக சென்று மனுக்களை பெற்று தீர்வு காணப்படும் என்றார். இத்திட்டமானது ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் என்னும் இடத்தில் உள்ள அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது மக்களுக்கு சில நலத்திட்டங்களை வழங்கினார்.
அதன்படி இந்த குறை தீர்க்கும் திட்டம் மூலம் பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு தகுதியான மனுக்களுக்கு அரசு முன்னுரிமை கொடுத்து விரைவில் நிவர்த்தி செய்யப்படும் என்றார். தற்போது அரசு சார்பில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாசில்தார் தலைமையில் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், விவசாயிகள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்காக சிறப்பு குறை தீர்வு முகாம்களை அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா, சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவை உடனுக்குடன் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகர்புற வளர்ச்சி துறை என அனைத்து துறைகளை சார்ந்த ஒரு அலுவலர் குழு, ஆகஸ்டு மாத இறுதிக்குள் நேரில் சென்று மனுக்களை பெறுவார்கள். பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். மனுக்கள் மீதான நடவடிக்கை ஒரு மாத காலத்திற்குள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழக அரசு முதுமை காரணமாக உழைக்க இயலாத முதியோர்களுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தின் மூலம் மேலும் தகுதியான 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார். அதேபோன்று காப்பீட்டுத் திட்டத் இல்லாதவர்கள் நேரடியாக காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர்கள் என தெரிவித்தார்.
Anitha Jegadeesan
Krishi Jagran