விவசாய மின் இணைப்புப் பெறும் நடைமுறையை மிகவும் எளிமையாக்கி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெறுவது மற்றும் இடம் மாற்றுவதில் ஏராளமான சிரமங்கள் இருந்ததால், நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என விவசாய அமைப்புகள் கோரி வந்தன. இதனை ஏற்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவசாய மின் இணைப்பு பெறுதல்
-
விவசாய மின் இணைப்புப் பெறும் விவசாயிக்கு குறைந்தது அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.
-
கிராம அலுவலரால் வழங்கப்படும் கிணறு மற்றும் நிலத்தின் உரிமைச் சான்றுடன் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த சான்றும் தேவையில்லை.
-
கிணற்றில் கூட்டு சொந்தக்காரர்கள் இருந்தால் அவர்களின் ஒப்புதல் கடிதம் அல்லது ஈட்டுறுதி பத்திரம் (இண்டெமினிட்டி பாண்டு) இணைக்க வேண்டும்.
-
ஒரே சர்வே நம்பரில் அல்லது உட்பிரிவு சர்வே நம்பரில் ஒருவருக்கு இரண்டு கிணறுகள் இருந்தால், அவர் பெயரில் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின் இணைப்பு அனுமதிக்கப்படும்.
-
விண்ணப்பங்களின் அடிப்படையில், உரிய முறை வரும்போது கடிதம் அனுப்பப்படும். அப்போது பெயர், சர்வே எண்ணில் எந்த மாறுதலும் இல்லை என்று உறுதி செய்வதற்காக, 90 நாள் அறிவிப்பு கடிதம், விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும்.
-
உறுதிக்கடிதம் கிடைத்ததும் மூன்று பிரிவுகளில் வரிசைக்கிரமமாக பதிவு செய்யப்படும்.
-
முதல் பிரிவில் மின்தொடர் விஸ்தரிப்பு, மேம்பாடு மற்றும் மின்மாற்றி மாற்றம் எதுவும் தேவைப்படாத மின் இணைப்பு, இரண்டாம் பிரிவில் மின்தொடர் விஸ்தரிப்பு, மேம்பாடு உள்ளடக்கிய மின் இணைப்பு, மூன்றாம் பிரிவில் மின் தொடர் விஸ்தரிப்பு மேம்பாடு மற்றும் மின் மாற்றி மாற்றம், புதிய மின் மாற்றி அமைப்பை உள்ளடக்கிய மின் இணைப்பு என்ற அடிப்படையில் இந்த விண்ணப்பங்கள் பதிவு செய்துகொள்ளப்படும்.
-
மோட்டார் பம்ப் செட், கெப்பாசிட்டர் பொருத்தி மின் இணைப்புப் பெறத்தயார் என்ற கடிதம் விண்ணப்பதாரரிடம் இருந்து பெற்ற மூன்று நாட்களுக்குள் மின் இணைப்பு தரப்படும்.
மின் இணைப்பை இடமாற்றம் செய்தல்
-
மின் இணைப்பு உள்ள இடத்தில், தற்போது கிணறு இல்லை என்றாலும் மின் இணைப்பை இடம் மாற்ற அனுமதிக்கப்படும்.
-
இதேபோல், சேஞ்ச் ஓவர் சுவிட்ச் அனுமதி பெறுவதற்கான நடைமுறைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருவதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவர்.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயத்தில் நெல் சாகுபடி - அதிக மகசூல் பெற 8 யோசனைகள்!
அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!