News

Tuesday, 07 January 2025 04:40 PM , by: Muthukrishnan Murugan

Tamil Nadu Iyarkai Velan Koottamaipu (TNIVK) met Agri minister

தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், வருகிற தமிழ்நாடு வேளாண் நிதி நிலை அறிக்கையில் (2025-2026) அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், உழவர் பேருந்து தொடங்க வேண்டும் என 50 பரிந்துரைகளை தமிழ்நாடு வேளாண் அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் வழங்கியுள்ளார்கள் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர்.

இந்த பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையானது, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் மண்டலங்களாக வகுத்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு நேரடியாகப் பயணம் செய்து, வேளாண் பெருமக்களுடன் கூட்டங்கள், விவாதங்கள் நடத்தித் தயாரித்துள்ளனர் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர். அறிக்கையின் சில முக்கிய விவரங்கள் பின்வருமாறு-

பட்ஜெட்டில் குறைந்த நிதி ஒதுக்கீடு:

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்ற முன்னோடிகளைக் கொண்ட தமிழ்நாடு, நாட்டிலேயே அதிக அளவில் சிறப்பாக இயற்கை வேளாண்மை முறைகளைப் பின்பற்றும் வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் சரியான கொள்கை வழிகாட்டுதல் மற்றும் வேலைத்திட்டங்கள் இல்லாததால் தடுமாறி வருகிறது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மையை ஆதரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி தோராயமாக ரூ.21.4 கோடி மட்டுமே. இது மொத்த வேளாண் பட்ஜெட்டான ரூ.42,281.88 கோடியில் வெறும் 0.05%-க்கும் குறைவாகவே இருந்தது. ஆந்திரப் பிரதேசம், ஹிமாச்சல், கர்நாடகா போன்ற மாநிலங்கள், பாதுகாப்பான நல்ல உணவை உறுதி செய்வதற்காக, இயற்கை வேளாண்மையை படிப்படியாகத் தத்தெடுப்பதை ஆதரிப்பதற்கான நீண்டகால உத்தியை புதுமையான முறையில் முன்னெடுத்துச் சென்றுள்ளன.

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றவும் நஞ்சில்லாத வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தவும், நீடித்த விளைச்சலைத் தரும் சாகுபடி முறையை உருவாக்கவும் இயற்கையைச் சிதைக்காத வேளாண் முறையைப் பின்பற்றவும் உழவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் தரும் வகையில் வரும் நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும். இதுவே நாம் நம் அடுத்த தலைமுறைக்கு அளிக்கும் சிறந்த பரிசாக இருக்கும்.

இப்படியான வழிமுறைகளைப் பின்பற்றி இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை உருவாகுமானால் தமிழ்நாடு மேலும் பல உச்சங்களைத் தொடும். மதிய உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், உழவர் சந்தை என பல திட்டங்களை அறிமுகப்படுத்தி முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த தமிழ்நாடு மீண்டும் இயற்கை வேளாண்மை மூலம் இன்னொரு உச்சத்தை தொட வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது.

சில சிறப்பு பரிந்துரைகளின் விவரம்:

  1. இயற்கை வேளாண்மையினால் பெறக்கூடிய நல்ல ஆரோக்கியம், சுற்றுச்சூழல், வேளாண் வாழ்வாதாரம் ஆகியவற்றினை கருத்தில் கொண்டு மொத்த வேளாண் பட்ஜெட்டில் 30% இயற்கை வேளாண்மைக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
  2. உழவர்கள் மற்றும் மகளிர் குழுக்களால் உள்ளூர் இயற்கை இடுபொருள் கடைகள் மற்றும் பாரம்பரிய (திறந்த-மகரந்தச் சேர்க்கை) விதைகளுக்கான சமூக விதை மையங்கள் அமைப்பதற்கு ஆதரவளிக்கும் திட்டம்.

இயற்கை உழவர்களுக்கு ஊக்கத்தொகை:

  1. சுற்றுச்சூழல் சேவைக்கான ஊக்கத்தொகை வழங்குதல்: இயற்கை வேளாண்மையால் உருவாகும் சுற்றுச்சூழல் நன்மைகளுக்காகவும், அதன் தற்சார்பு வேளாண் முறைகளால் சேமிக்கப்படும் அந்நிய செலாவணிக்காகவும் ஆண்டுதோறும் இயற்கை உழவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்.
  2. மூத்த இயற்கை உழவர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து, மாநிலம் தழுவிய இயற்கை வேளாண் பயிற்சிகள் அமைக்க வேண்டும். இதே குழுவினை மற்ற திட்டங்களைச் செயல்படுத்தவும் அணுகலாம்.
  3. PDS (நேரடி கொள்முதல் மையங்கள் மூலம்), ICDS, பள்ளி காலை/மதிய உணவு திட்டம், மகப்பேறு பலன்கள் போன்றவற்றிற்காக அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் உணவில் குறைந்தது 30% இயற்கை உணவு (அனைவருக்கும் பாதுகாப்பான நஞ்சற்ற உணவை உறுதிசெய்ய) இருக்க வேண்டும்.
  4. மாவட்ட அளவில் உள்ளூர் இயற்கை உழவர் வார/மாத) சந்தைகளைத் தொடங்குவதற்கான ஆதரவு.

உழவர் பேருந்து தொடங்குதல்:

  1. உழவர் பேருந்து தொடங்குதல் உழவர்கள் தங்களுடைய விளைபொருட்களை விலையில்லா / மானிய விலையில் குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல தனி பேருந்துகள் மற்றும் கூரியர் சேவைகள்.
  1. மனித-விலங்கு மோதலைக் குறைக்க, வனத்துறையுடன் இணைந்து வேளாண் பகுதிகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட வேட்டை, வேலி அமைத்தல், சமூகக் காடுகள், இழப்பீடு போன்ற முறையான நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்து செயல்படுத்த வேண்டும்.
  2. இயற்கை வேளாண்மை தொடர்பான கல்வி நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கள் இயற்கைப் பண்ணைகளைப் பார்வையிடுதல் போன்றவற்றை பாடத்திட்டத்தில் இணைத்து ஏற்பாடு செய்ய வேண்டும்.
  3. சிறு/குறு/பெண் உழவர்களுக்கு இன்றைய விவசாய வேலைக்கான சரியான பொருத்தமான கருவிகள், உபகரணங்கள் கிடைக்க திட்டங்களும் ஆராய்ச்சிகளும் உருவாக்கப்பட வேண்டும்.

Read also: cattle feed Azolla: அசோலா வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலைகள் என்ன?

TNIVK meeting with farmers

அனந்து, பாமயன், ஷீலு பிரான்சிஸ், ராம சுப்பிரமணியன், வெற்றிமாறன் இரா, சிவகுமாரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழு, வேளாண் செயலாளர், வேளாண் இயக்குநர் மற்றும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அலுவலகங்களுக்கு பரிந்துரை ஆவணத்தை வழங்கியுள்ளனர். மேலும் பரிந்துரை ஆவணத்தை மாநில திட்டக் குழு உறுப்பினர்களான டாக்டர் சிவராமன் மற்றும் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் ஆகியோரிடம் ஒப்படைத்து, திட்டக் குழுவிலும் இதைப் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையான பரிந்துரை விவரங்களுக்கு பின்வரும் இணைப்பினை சொடுக்குக..

தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு பரிந்துரைகள்

Read more:

மருந்தாளுநர் டூ முழு நேர இயற்கை விவசாயம்: பல பயிர் சாகுபடியில் அசத்தும் கென்னடி

நெற்பயிருக்கான உரம் டூ கால்நடை தீவனம்: அசோலாவின் தன்மை என்ன?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)