தமிழ்நாடு அரசு வனவிலங்குகளை மின் விபத்திலிருந்து பாதுகாப்பதற்கு மின்வேலிகள் அமைக்க, பதிவுப்பெற போன்றவற்றில் மேற்கொள்ள வேண்டிய விதிகள் குறித்த அறிக்கையினை வெளியீட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
வனவிலங்குகளைப் பாதுகாப்பதில், தமிழ்நாடு அரசு அதீத ஈடுபாடு காட்டி வருகிறது. இந்நிலையில், உயர் மின்னழுத்த மின் வேலிகளால், மின்விபத்து ஏற்பட்டு, வன விலங்குகள் குறிப்பாக, யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
எனவே வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கு, மின் வேலிகளை அமைப்பதற்கான தரப்படுத்தப்பட்ட அளவுகோலுடன் கூடிய விதிமுறைகளை நிர்ணயிப்பது இன்றியமையாததாகிவிட்டது. அதே வேளையில், காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில், வனவிலங்குகளால் சேதமடையும் விவசாய விளைபொருட்களைப் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலனைப் பேணுதலும் முற்றிலும் அவசியமாகிறது. விவசாயிகள் தங்கள் பயிரை பாதுகாப்பதற்கு தரப்படுத்தப்பட்ட கீழ்க்கண்ட விதிமுறைகள் உதவும்.
முதல் முயற்சியாக, தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் 2023-னை அறிவித்து அரசிதழில் (03.07.2023) அறிவிக்கை செய்துள்ளது. இது சூரியசக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள் அமைப்பதையும், விவசாய நிலங்களைச் சுற்றி ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளைப் பதிவு செய்வதையும், தரப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் வழிவகுக்கும்.
அரசு அறித்துள்ள விதிகளின் முக்கிய அம்சங்கள்:-
- சூரியசக்தி மின் வேலிகள் உள்ளிட்ட மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயமாகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- இந்த விதிகள், தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காடுகளிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
- மின் வேலிகளை அமைக்கும் வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவன மின்வேலிகளும், இவ்விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள BIS தரநிலைகளான BIS-302-2-76 (இந்தியா) விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
- அறிவிக்கை செய்யப்பட்ட, காப்புக்காட்டின் வனப் பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் ஏற்கெனவே மின்வேலிகளை அமைத்திருப்பவர்கள், தங்கள் வேலிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கொண்ட ஒரு கூட்டுக் குழு, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கள ஆய்வு செய்து, பதிவுப் புத்தகத்தில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
- சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலர், மின்வேலி அமைக்கப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்து சரிபார்த்த பிறகு, மின்வாரியத்துறை அதிகாரிகளுடன் விவரக்குறிப்புகளை சரிபார்த்து உரிய ஆய்விற்கு பிறகு ஒப்புதல், குறைப்பு அல்லது நிராகரித்து, விண்ணப்பத்தின் மீது 45 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.
- இந்த விதிகள் வெளியிடப்பட்ட தேதியில் ஏற்கனவே மின் வேலிகள் அமைத்துள்ள நில உரிமையாளர், இந்த விதிகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து, அறுபது நாட்களுக்குள் பதிவுச் சான்றிதழைப் பெறுவதற்கு, மாவட்ட வன அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
- அனுமதி கிடைத்தவுடன், சொத்தின் உரிமையாளர் அனுமதி பெற்ற நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் மின் வேலியை அமைத்து, உறுதிமொழியுடன் மின்வேலியை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
- வனத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் குழுவின் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளின் தரம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
pic courtesy: Dhanu Paran
மேலும் காண்க:
2G போனை தூக்கிப்போடுங்க- ரூ.999-க்கு வந்தாச்சு 4G Jio Bharat Phone