News

Wednesday, 09 December 2020 09:34 AM , by: Daisy Rose Mary

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில் முழுமையான கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவான புரெவி புயலால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. இதனால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் நீரில் முழ்கின. இந்நிலையில், மழை சேதம் குறித்து ஆய்வு நடத்த வந்த மத்திய குழுவினர் நேற்று முன்தினம் சேதங்களை பார்வையிட்டனர். இதை தொடர்ந்து நேற்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

வயலில் இறங்கிய முதல்வர்

இந்த சந்திப்புக்கு பிறகு கடலூர் சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீரில் முழ்கிய வயலில் இறங்கி பார்வையிட்டார். அப்போது, விவசாயிகள் அழுகிய நெற்பயிரை காண்பித்தனர். அந்த பயிரை கையில் வாங்கிய முதல்வர் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

வீராணம் ஏரியில் ஆய்வு

பின்னர், வீராணம் ஏரிக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீர்மட்டம் எவ்வளவு?, எத்தனை ஏக்கர் பாசனம் பெறுகிறது?, சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு எவ்வளவு கனஅடி நீர் அனுப்பப்படுகிறது? என்பது குறித்து கலெக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

முழுமையான கணக்கெடுப்பு நடத்த உத்தரவு

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர், நிவர், புரெவி ஆகிய 2 புயலால் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கிட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை கிடைத்ததும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

புயல், வெள்ள பாதிப்புக்கு போதிய நிதி தருமாறு மத்திய அரசிடம் கேட்டோம். மத்திய அரசும் உடனடியாக பாதிப்பை பார்வையிட குழுவை அனுப்பி வைத்தது. புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை என்பது தவறு. நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும் என்று நம்புகிறேன் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

இந்த செய்திகளை படித்தீர்களா...?

புரெவி புயலால் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: வேளாண் அமைச்சர் தகவல்!

கொரோனா : மீன்வளத் துறைக்கு மிகப்பெரிய நன்மை உண்டாகும்: குடியரசுத் துணை தலைவர்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)