அரசின் உதவியுடன் விவசாயிகள் தீவனப் பயிர், அடர் தீவனம் உற்பத்தி செய்து பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கால்நடைத் துறை தெரிவித்துள்ளது. மழை காலம் என்பதால் பசுந் தீவனப் பயிர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த சில வருடங்களாக தமிழக அரசு மானிய விலையில் பசுந்தீவனம் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் இம்முறை கடலூர் மாவட்டத்தில் சுமார் 1,800 ஏக்கரில் மானியத்துடன் கூடிய தீவனப் பயிர் வளர்க்க திட்டமிட்டுள்ளதாக கால்நடைத் துறை தெரிவித்துள்ளது.
கால்நடை வளர்ப்பு, தீவனப் பயிர் வளர்ப்பு போன்றவற்றை தமிழக அரசு தொடர்ந்து ஊக்கப் படுத்தி வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப திட்டங்களையும், மானியங்களையும் அறிவித்து வருகிறது. தற்போது கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் கால்நடைகள் இருப்பதால், அவற்றுக்கான தீவனத் தட்டுப்பாடை போக்க 1,800 ஏக்கரில் சோளம், தட்டைப் பயறு, கோ – 4, கோ – 5 புற்கள், அமெரிக்கன் டால்ஸ், டெஸ்மாந்தர் ஆகிய புல் வகைகளை வளர்ப்பதற்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்க உள்ளது.
மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மானியம் வழங்கப்படுகிறது. தீவன பயிர்களின் விதை, கருவிகள் ஆகியவற்றுக்காக ஏக்கருக்கு ரூ.5,500 மானியம் வழங்கப் பட உள்ளது. இதில், விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்குத் தேவையான தீவனத்தை வளர்த்துக் கொள்ளலாம். மேலும் தற்போது மாவட்டத்தில் வைக்கோல் போதுமான அளவுக்கு கையிருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதே போன்று மழைக் காலத்தில் கால்நடைகளுக்கு தோன்றும் நோய்களுக்கான மருந்துகளும் தேவையான அளவு இருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியம் பெற தகுதியானவர்கள்
- தமிழக அரசின் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற்ற விவசாயிகள் மற்றும் சிறு குறு விவசாயிகள்.
- பயனாளிக்கு கால் ஏக்கர் முதல் 1 ஏக்கர் வரை தேவையான விதைகள் பெற்றுக் கொள்ளலாம்.
- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் பயனடைந்தவராக இருக்கக் கூடாது.
- கால்நடை வளர்ப்போர் தானே சொந்தமாக பசுந்தீவனம் வளர்த்து அதிலிருந்து விதை உற்பத்தி செய்து பயன்பெறும் பொருட்டு சோளம் விதைகள் வழங்கப்பட உள்ளது.
- பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
Anitha Jegadeesan
Krishi Jagran