காகதியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ்(KITS-W) பல்கலைக்கழக மாணவர்கள் ஓட்டுநர் இல்லாத தானியங்கி டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த டிராக்டரின் செயல்பாடு தெலுங்கானா அமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வாரங்கலில் உள்ள காகடியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (கிட்ஸ்) மாணவர்கள் ஓட்டுநர் இன்றி ஆட்டோமெட்டிக் முறையில் இயங்கும் டிராக்டரை உருவாக்கிய பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் ஐந்தாவது முறையாக டிராக்டரை இயக்கி சோதனை மேற்கொண்டனர். சோதனையும் வெற்றி பெற்ற நிலையில் இந்த கண்டுபிடிப்புக்கு காரணமான ஆசிரியர், மாணவர்கள் என அனைவரையும் பலர் பாராட்டி வருகின்றனர்.
KITS-W, முதன்மை பேராசிரியர் கே.அசோகா ரெட்டியின் வழிகாட்டுதலின் கீழ், இந்த டிராக்டர் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. முதலில் டிரைவர் இல்லாத டிராக்டர் யோசனையினை உயிர்ப்பிக்கும் வகையில் 40 லட்சம் ரூபாய் மானியம் ஆராய்ச்சிகாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அசோகா தெரிவிக்கையில், டிரைவர் இல்லாத தானியங்கி டிராக்டர் விவசாயிகளுக்கு நில சாகுபடியை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் செலவு குறைந்ததாகவும் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் செய்கிறது. இத்திட்டம் விவசாய நடவடிக்கைகளில் மனித முயற்சியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, சிறிய வயல்களை உழுவதற்கான ரிமோட்-கண்ட்ரோல்ட் திறன்களை வழங்குதல் மற்றும் பிற செயல்பாடுகளை இந்த டிராக்டருடன் நாங்கள் இணைத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
கம்ப்யூட்டர் கேம் போன்று ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் இதை இயக்க முடியும் என்று பேராசிரியர் நிரஞ்சன் ரெட்டி விளக்கினார். டிராக்டரில் இணைக்கப்பட்டிருக்கும் சென்சார்கள் மூலம் வெப்பநிலை மற்றும் மண்ணின் ஈரப்பதம் போன்ற பல்வேறு நிகழ்நேர களத் தரவைச் சேகரித்து அதற்கேற்ப டிராக்டரின் செயல்பாடு இயங்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு, தெலுங்கானா தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுக்குறித்த தனது டிவிட்டில், ”இது விவசாய தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது. சமூகத் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் இளம் கண்டுபிடிப்பாளர்கள், இதுபோன்ற மேலும் பல யோசனைகள் மற்றும் தயாரிப்புகளுடன் வெளிவர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மேம்பாடு மற்றும் தானியங்கு விவசாயக் கருவிகளின் பாதுகாப்பு சோதனை ஆகியவற்றிற்காக கல்லூரியில் பிரத்யேக ஆன்-சைட் வசதிகளுடன், திட்டம் தற்போது செயல்படுத்தப்படும் கட்டத்தில் இருப்பதாக மற்றொரு பேராசிரியர் வசீம் தெரிவித்தார்.
விவசாய கூலி வேலைக்கு ஆள் கிடைப்பதில் சிரமம் நிலவும் நிலையில், இதுப்போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி விவசாயத்துறையில் மேற்கொள்ளப்படும் கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கது என சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
pic courtesy: minister KTR
மேலும் காண்க:
தமிழக விவசாயிகள் பலருக்கு சிறுநீரக பாதிப்பா? ஆய்வு செய்ய நடவடிக்கை