முதலமைச்சரின் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்ட திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கான ரூ.900 மதிப்புள்ள கிட், 50 சதவீத மானியத்தில் ரூ.450க்கு தோட்டக்கலை மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது. மதுரையில் இத்திட்டத்திற்கு பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.மதுரை மாவட்டத்தின் நகர், புறநகர் பகுதிகளில் மாடித்தோட்டம் அமைத்து இயற்கையான முறையில் விளைவித்த காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளை அறுவடை செய்வதில் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை தாங்களே விளைவித்து, உண்பதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.
இதற்கென தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் திட்டத்தில் வழங்கும் ஒரு கிட்டில் செடி வளர்க்கும் 6 வளர் பைகள், 6 கிலோ தென்னை நார்கழிவு கட்டிகள், 6 வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைகோடெர்மா விரிடி போன்ற இயற்கை இடுபொருட்களுடன், வேப்ப எண்ணெய், மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு முறைக்கான கையேடு ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நஞ்சில்லா பொருளை நாமே அறுவடை செய்யலாம்வீட்டில் நாம் சாப்பிடும் காய்றிகள், பழங்கள் கீரைகள் எல்லாம் பெரும்பான்மை கடைகளில் இருந்தே வாங்கி பயன்படுத்துகிறோம். இவைகளில் ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தற்போது இயற்கை மீதான விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரித்திருப்பதால் இந்த மாடித்தோட்டம் அமைப்பதன் மீது ஆர்வத்தை தந்திருக்கிறது.
மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம் என்பது இயற்கை உரம், இயற்கை நுண்ணுயிர் உரம், இயற்கை பூச்சிக்கொல்லி ஆகியவற்றின் மூலம் வீட்டின் மாடி மற்றும் வீட்டை சுற்றி உள்ள பயன்படுத்தப்படாத பகுதிகளில் காய்கறிகள், பழங்கள், மூலிகை பயிர்களை நட்டு, நஞ்சில்லா மற்றும் சத்தான உணவு பொருட்களை நாமே அறுவடை செய்து பயன்படுத்துவது ஆகும். நாளுக்கு நாள் காய்கறிகளின் விலை ஏற்றத்தினால் மாடித்தோட்டம் மூலம் அந்த செலவை குறைக்கலாம். நம் உடலுக்கு தேவையான சத்துக்களை மாடித்தோட்ட காய்கறிகள், பழங்கள் மூலிகை பயிர்கள் கொடுக்கிறது. மேலும் மாடித்தோட்ட பராமரித்தல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது
மேலும் படிக்க