The 12th board exam results will be published on May 8 says TN minister
நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நடைப்பெற உள்ளதன் காரணமாக தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவடைந்தன. இதற்கான தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை மனதளவில் பாதிக்க வாய்ப்புள்ள காரணத்தினால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே-8 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுக்குறித்த அறிவிப்பானை விவரங்கள் பின்வருமாறு-
மேல்நிலை இரண்டாமாண்டு (+2) மார்ச்/ஏப்ரல் 2023- பொதுத்தேர்வு முடிவுகள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் வருகிற மே மாதம் 8 ஆம் தேதி (08.05.2023) (திங்கட்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடப்படப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி மற்றும் நேரம்: 08.05.2023 (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு
தேர்வு முடிவுகளை காண இணையதள முகவரி:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge.tn.gov.in
தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க: