ஏற்காட்டில் 46-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி 21.05.2023 முதல் 28.05.2023 வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் 5 இலட்சம் அரிய வண்ண மலர்களைக் கொண்டு இந்த காட்சியில் வடிவமைக்கப்படவுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு. எங்கடா போகலாம்னு நினைச்சிட்டு இருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 46-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியினை 21.05.2023, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழக அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு தொடங்கி வைக்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
கண்காட்சியின் சிறப்பம்சம் என்ன?
குறிப்பாக, இக்கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னேஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட 5 இலட்சம் அரிய வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்படவுள்ளது. மேலும், பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் டாலியா, மேரி கோல்ட், ஜீனியா, டோரினியம், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் வண்ண மலர்களை கொண்ட 10 ஆயிரம் மலர் தொட்டிகள் இம்மலர்க்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
மேலும், இம்மலர்க்கண்காட்சியில் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய பல்வேறு பழங்களைக் கொண்டு பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது. அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலை ஏற்றம் (டிரக்கிங்), கைப்பந்து போட்டிகள், கயிறு இழுத்தல் போட்டிகள், மராத்தான், சைக்கிளிங், சிலம்பம், படகு போட்டி, கிரிக்கெட் போட்டிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, கலைப்பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நாள்தோறும் பல்வேறு இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
தொடக்க விழாவில் யாரெல்லாம் பங்கேற்பு:
இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் ஆகியோர் 46-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியினை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப்பேருரை ஆற்றவுள்ளனர். மேலும், இவ்விழாவிற்கு சேலம் மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
46-வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சிக்கு சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் வருகைதந்து சிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
pic courtesy: salem collector twitter
மேலும் காண்க:
RTE சட்டம்- LKG, 1 ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் முறை? கடைசி தேதி எப்போ?