முன்பின் தெரியாத யாருக்கும் வழியில் லிப்ட் கொடுக்க வேண்டாமென போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த அறிவுறுத்தலின் பின்னணி என்னவென்றால், தெலங்கானாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம்தான்.
தெலங்கானா மாநிலம், கம்மம், பொப்பரானி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஜமீல். இவரது பெண்ணை ஆந்திர மாநிலம், ஜக்கய்ய பேட்டை, வல்லபீ எனும் ஊரை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் முடித்து கொடுத்தார்.
ஜமீல் பைக்கில் அவரது மகள் வீடு அமைந்துள்ள வல்லபீக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வல்லபீ கிராமத்தின் அருகே சாலையில் ஒருவர் லிப்ட் கேட்டார். அதை பார்த்த ஜமீல் பைக்கை நிறுத்தி அவரை பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு மீண்டும் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
மயக்க ஊசி
அப்போது பின்னாடி இருந்த நபர் திடீரென ஜமீலின் முதுகில் ஊசி போட்டார். சுருக்கென தனது முதுகில் குத்தியதை உணர்ந்த ஜமீல் பைக்கை நிறுத்த முயன்றார். அவர் வாகனத்தை நிறுத்துவதற்குள் பின்புறம் அமர்ந்திருந்தவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
லிஃப்ட் கேட்டு வந்தவர் தப்பி ஓடுவதற்கு முன்னதாக ஊசி போட பயன்படுத்திய சிரிஞ்சை சாலை ஓரத்தில் வீசி விட்டு ஓடினார். அதைப் பார்த்துவிட்ட ஜமீல் தனக்கு ஊசி போட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக செல்போன் மூலம் தனது மனைவிக்கு தெரியப்படுத்தினார். அவர் பதறிபோய், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.
தலைச்சுற்றல்
அதற்குள் ஜமீலுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது, அந்த வழியாக செல்வோரிடம் நடந்த விஷயங்களை கூறி உதவி கேட்டார். அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர், 108 ஆம்புலன்சு வரவழைத்தனர். ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜமீல் உயிரிழந்தார்.
தேடுதல் வேட்டை
ஜக்கைய்யா பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஊசி போட்ட சிரிஞ்சை கைப்பற்றி கொலையாளியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இருக்குமா எனும் கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதையடுத்து முன்பின் தெரியாத யாருக்கும் வழியில் லிஃப்ட் கொடுக்க வேண்டாமென அம்மாநில போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!