மின் கம்பத்தில் மின் பெட்டிகளை கட்டி வைத்து, அதன் அருகில் விவசாயிகளை நிறுத்தி புகைப்படம் எடுத்து, இலவச மின்சார இணைப்பு கொடுத்ததுபோல கணக்குகாட்டியுள்ளனர் மின்வாரிய அதிகாரிகள். விவசாயிகளுக்கான இலவச மின்சார இணைப்பு திட்டம் ஒரு ஏமாற்று வேலையா?
கோவை மாவட்டம் பல்லடம் மின் பகிர்மான பகுதியின் கீழ் சாலைப்புதூர் கிராமம் வருகிறது. சாலைப்புதூர் கிராமத்தில் மொத்தம் 330 விவசாயிகள் இலவச மின் இணைப்பு வழங்க தேர்வாகியுள்ளனர். முதற்கட்டமாக 217 பேருக்கு இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 192 பயனாளிகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டதாக மின்வாரிய இணையதளத்தில் தகவல் வெளிடப்பட்டது. மின்சார கம்பங்களில் ஒரு மின்பெட்டியை கட்டி வைத்து, அதில் விவசாயிகள் போல யாரையோ நிறுத்தி புகைப்படம் எடுத்துள்ளனர்.
விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது போல் கணக்கில் காட்டுவதற்காக இப்படி புகைப்படம் எடுத்து, மின்வாரிய இணையத்தில் பதிவேற்றியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், மின் இணைப்பு கொடுக்காமலேயே, இணைப்பு கொடுக்கப்பட்டது போல தவறான தகவல்களை அரசுக்கு கொடுத்து இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விவகாரத்தில் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 3 நாட்களில் 27 பேருக்கு உடனடியாக இலவச மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மீதமுள்ள விவசாயிகளுக்கும் இலவச மின்சார இணைப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.
மின் இணைப்பு கொடுக்காமல் தவறான தகவல்களை அரசுக்கு கொடுக்க வேண்டிய காரணம் என்ன? இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் யார்? விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதனிடையே இந்த மோசடி தொடர்பாக திருப்பூர் மாவட்ட மின்பகிர்மான முதன்மை பொறியாளரிடம் விளக்கம் கேட்ட போது, அனைத்து இணைப்புகளும் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இணையத்தில் புகைப்படம் பதிவேற்றும் போது தவறான புகைப்படத்தை பதிவேற்றி உள்ளனர் என்றம் தெவித்தார்.
குழப்பத்திற்குக் காரணமான போர்மென் ஐயப்பன் குட்டி, லைன் இன்சார்ஜ் மருதமுத்து ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பட்டார்.
தொடர்ந்து முறையான மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் திருப்பூர் மாவட்ட மின்பகிர்மான முதன்மை பொறியாளர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
2 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - அமைச்சர் உறுதி!