தருமபுரி மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட தருமபுரி காதி கிராஃப்ட் விற்பனை அங்காடியினை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
"கதர்.. ஏழைகள் நூற்றது, எளியவர் நெய்தது, கூழும் இல்லாதவர் குறை பல தீர்ப்பது" என நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை தெரிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட வேண்டி, வேலை வாய்ப்புகள் வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது.
கிராமப்புற தொழிலாளர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் இதர கிராமப்பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு, தருமபுரி கதர் அங்காடியை 2022-23 ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் படி தொகை ரூ.11.43 இலட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி கதர் அங்காடியில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் தயாரிக்கப்படும் மென்மையான கதர், கண்கவர் பட்டு மற்றும் வண்ண வண்ண பாலியஸ்டர் இரகங்கள் மற்றும் கிராம உற்பத்தி பொருட்களான குளியல் சோப்பு வகைகள், சலவை சோப்பு வகைகள், அக்மார்க் தேன், சந்தன மாலை, பூஜை பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையினை முழு அளவில் பூர்த்தி செய்திடும் நோக்கத்துடன் கதர் மற்றும் கிராமப்பொருட்களும் தருவிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது புதியதாக பாரம்பரிய அரிசி வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட தேன் வகைள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், ஃபிராக்ரன்ஸ் குளியல் சோப்பு வகைகள், ஃபிராக்ரன்ஸ் அகர்பத்திகள், கற்றாழை சாம்பு, கைகழுவும் திரவம், மற்றும் திரவ சலவை சோப்பு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு ரூ.30.00 இலட்சம் மதிப்பிலான கதர் மற்றும் கிராமப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தற்போது புதியதாக அனைத்து மாவட்டங்களிலுள்ள மகளிர் சுய உதவிக்குழு மற்றும் வேளாண்மைப் பொருட்களை உற்பத்தி செய்யும் அமைப்புகள் மூலம் அந்தந்த மாவட்டங்களிலும் சிறப்பு சேர்க்கும் வகையில் உண்ணும் மற்றும் உண்ணா பொருட்களை கொள்முதல் செய்து விற்பனைக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கதர் மற்றும் கிராமப் பொருட்களை வாங்கி பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சேலம் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குநர் ரவிக்குமார், காதி கிராஃப்ட் விற்பனை அங்காடி மேலாளர்கள் ஜெ.பாலசுப்பிரமணியம் (தருமபுரி), ஜெயராமன் (கிருஷ்ணகிரி), பனை வாரியம் மேலாண்மை இயக்குநர்கள் ஜி.சரவணபாண்டியன், எஸ்.ராமகிருஷ்ணன், தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வம் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
ஜூலைக்குள் மீண்டும் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மின் உற்பத்தி- உதயநிதி வாக்குறுதி
வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை- தொழிலாளர் நலன் துறை அமைச்சர் அறிக்கை