மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை இணைந்து நடத்திய கோவை மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து மாணவ- மாணவியர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உயர்கல்வியை தொடர்வதற்கு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை 27 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதனைப்போன்று மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயில கல்விக்கடன் சிரமமின்றி கிடைக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேற்று (14.03.2023) மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான மாபெரும் கல்விக்கடன் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தொடங்கி வைத்து மாணவ மாணவியர்களிடம் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி கல்விக்கடன் முகாம் குறித்து குறிப்பிடுகையில், ”உயர்கல்வி பயிலும் மாணக்கர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மாணவ மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது குறித்து, 3 மாதங்களுக்கு ஒரு முறை வங்கியாளர்களை ஒருங்கிணைத்து ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டிற்கான கல்விக்கடன் ரூ.350 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் வரை ரூ.180 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.”
மேலும், “இந்த கல்விக்கடன் முகாமானது அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு வங்கிகள், கிளை வங்கிகள் கல்வி கடன் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெறப்படும் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2 வாரங்களுக்குள் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு விரைந்து கடனுதவி வழங்க இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் இந்துமதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் இணை பதிவாளர் சிவகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி, மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரமணகோபால், உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் காண்க:
சென்னையில் மழை வெள்ள அபாயத்தை குறைப்பது எப்படி? முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பு
விவசாயிகள் தற்கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல- சர்ச்சையில் சிக்கிய வேளாண் அமைச்சர்