தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இச்சூழலில் பொதுமக்களின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கியது. அந்த வகையில், மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது.
அவகாசம் நாளையுடன் முடிவு
அதன்படி, தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை இருந்தால் மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணமின்றி அதனை கட்டுவதற்கான அவகாசம் ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மேலும், சிறு, குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுள்ளது. இந்த நிலையில், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைவதால், பொதுமக்கள் தாமதக் கட்டணத்தை தவிர்க்கும் பொருட்டு முன்னதாகவே மின் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மின் கட்டணம் எப்படி கணக்கிட வேண்டும்?
10.05.2021 முதல் 24.05.2021 வரையிலான காலத்தில் (அதாவது முந்தைய மாத கணக்கீட்டிலிருந்து 60வது நாள் இந்த காலத்தில் இருப்பின்) மின்கணக்கீடு செய்ய வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள், மே 2019-ம் ஆண்டில் (கோவிட் இல்லாத காலம் என்பதால்) கணக்கீடு செய்யப்பட்ட தொகையினையே கணக்கீட்டுத் தொகையாக கருதி அந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.
புதிய நுகர்வோர்கள் அல்லது அவ்வாறு கணக்கீடு இல்லாதவர்கள் மே 2021-க்கான முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி அதாவது மார்ச் 2021-ன் கணக்கீட்டுப்படி மின்கட்டணம் செலுத்தலாம்.
இவ்வாறு செலுத்த வேண்டிய மின்கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் முறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது மே 2021-ற்கான கட்டணம் ஜூலை 2021-ல் முறைபடுத்தப்படும். மே 2021-ற்கான கணக்கீட்டுத்தொகை விபரம் மின்நுகர்வோர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தை கணக்கு செய்யலாம்
ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் பன்மடங்கு வசூலிக்கப்படுவதாக சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து, மே மாத கட்டணத்தை செலுத்தினால் அதிக கட்டணம் வருகிறது என்று நினைப்பவர்கள், மே மாதத்திற்கு முந்தைய ஏப்ரல் மாத மின் கட்டணத்தினை செலுத்தலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
கொரோனாத் தொற்றுக் குறைய உதவிய மக்களுக்கு நன்றி - முதலமைச்சர் ஸ்டாலின்!
அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!