ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பிறப்பித்துள்ளதுடன், கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்தன. இந்த புகார்களுக்கும் ஒரு முடிவை கட்டியது தமிழக அரசு. அதன்படி, பொருட்கள் தரமில்லாமல் இருக்கும் பட்சத்தில் அதை திரும்பி அனுப்பலாம் என்று அறிவித்திருந்தது. பிறகு ரேஷன் கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை, மறுபடியும் வினியோகம் செய்யக் கூடாது என்று ரேஷன் ஊழியர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது.
ரேஷன் கடைகள் (Ration Shops)
ரேஷன் கடைகள் குறித்த புகார்கள் வெடித்து கொண்டே உள்ளன.. குறிப்பாக, ரேஷன் கடைகளில் விற்கப்படும் மளிகை பொருட்களை விலைக்கு வாங்குமாறு, ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக, புகார்கள் கூறப்படுகின்றன.. தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை இலவசமாகவும், மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன. மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள், சோப்பு, மாவு வகைகள் உள்ளிட்டவை விலைக்கு விற்கப்படுகின்றன. அவற்றை கார்டுதாரர்கள் மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் என்ற நிலை உள்ளது.
மாத துவக்கங்களில் கார்டுதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க, அதிகளவில் வருவதால், அவர்களிடம், மளிகை பொருட்களை வாங்கினால் மட்டுமே, அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று சில இடங்களில் ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், வாங்க மறுத்தால், ரேஷன் பொருட்கள் வரவில்லை என்றும் கூறுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது.. எனினும் இதற்கும் முடிவு கட்டி உள்ளது தமிழக அரசின் கூட்டுறவுத் துறை.
புதிய உத்தரவு (New Order)
கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், செய்தியாளர்களிடம் சொல்லும்போது, 'ரேஷன் கடைகளில் வரும் பொது மக்களுக்கு, பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டும் என்று பணியாளர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. பொது மக்களே, தாமாக முன்வந்து வாங்குவதற்கான விளம்பரத்தை மேற்கொள்ள வேண்டுமே, தவிர, மக்களை பொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. அதேபோல, ரேஷன் பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது' என்றார். இந்த அறிவிப்பானது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க
அடுத்த ஆண்டும் பொங்கல் பரிசு நிச்சயம்: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் எப்போது? முக்கிய தகவல்!