பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து சமீப காலமாகவே பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக அல்லாத சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. ஆனால், மத்திய அரசின் சார்பில் நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத், அதை அமல்படுத்துவது குறித்த முடிவைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
பழைய பென்சன் திட்டம் (Old Pension Scheme)
பாஜக அல்லாத சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC-PM) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் கவலை தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டத்தால் வருங்கால தலைமுறைக்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறியுள்ளார். உலகப் பொருளாதாரத்தில் தற்போது நிலவும் மந்தநிலை மற்றும் சர்வதேச அமைப்புகள் உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மீண்டும் மீண்டும் குறைத்து வருவது போன்ற காரணங்களால் 2023ஆம் ஆண்டு கடினமான ஆண்டாக இருக்கும் என்பது தெளிவாகிறது என்று சன்யால் கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், ”பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டங்கள் இறுதியில் வருங்கால சந்ததியினருக்கு வரிச்சுமையை ஏற்படுத்தும். கடந்த சில தசாப்தங்களாக மிகுந்த சிரமத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தங்களில் இருந்து விலகி வேறு நடவடிக்கை எடுக்கும்போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்றார்.
பழைய பென்சன் திட்டம் இருந்த காலத்தில் முழு ஓய்வூதியம் அரசால் வழங்கப்பட்டது. 2004 ஏப்ரல் 1 முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தால் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்கள் அடிப்படைச் சம்பளத்தில் 10 சதவீதத்தை ஓய்வூதியத்தில் வழங்குகிறார்கள் அதே நேரத்தில் மாநில அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பழைய பென்சன் திட்டம் வந்துள்ளது. அதேபோல, ஜார்கண்ட் மாநிலமும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபிலும் இத்திட்டம் மீண்டும் அமலுக்கு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் சஞ்சீவ் சன்யால் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
2 லட்ச ரூபாய் பென்சன் வேண்டுமா? உடனே இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை: புத்தாண்டில் கிடைக்கப் போகுது!