வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், 25 கோடி மதிப்பீட்டில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்கள் வழங்குதல் மற்றும் ஒரு கோடி மதிப்பீட்டில் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி போன்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.6.2024) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
வேளாண் இயந்திரங்களுக்கு இன்றளவில் விவசாயிகள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை நிலவும் சூழ்நிலையில் சிறு,குறு, விவசாயிகளும் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இ-வாடகை செயலி மூலம் குறைந்த வாடகை:
இந்நிலையில் வேளாண்மை உழவர் நலத்துறையின் 2023-24 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், வட்டார அளவில் வேளாண் பணிகளைத் தங்குதடையின்றி மேற்கொள்ள உதவும்பொருட்டு, டிராக்டர்கள், ரோட்டவேட்டர்கள், எந்திரக் கலப்பைகள், கரும்பு அறுவடை இயந்திரங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு தேவைப்படும் விவசாயிகளுக்கு துறையின் இ-வாடகை செயலியின் மூலமாக குறைந்த வாடகைக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் 10.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 90 டிராக்டர்கள், 180 கொத்துக் கலப்பைகள் மற்றும் 90 ரோட்டவேட்டர்கள் ஆகியவற்றினை அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் டிராக்டர்களை கொடியசைத்து இன்றைய நிகழ்வில் தொடங்கி வைத்தார்.
டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி வழங்குதல்:
வேளாண்மை உழவர் நலத்துறையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், வேளாண் இயந்திரங்களை இயக்குவதற்கு திறன் வாய்ந்த ஓட்டுனர்களை உருவாக்கிட டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றை இயக்குவதற்கும், கையாள்வதற்கும் 500 ஊரக இளைஞர்களுக்கு வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஆறு இயந்திர பணிமனைகளில் ஒரு கோடி ரூபாய் செலவில் இயந்திரங்களை இயக்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதற்கான டிராக்டர்களை தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன். வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப., வேளாண்மைத் துறை சிறப்பு செயலாளர் முனைவர் பொ. சங்கர், இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் பா.முருகேஷ். இ.ஆ.ப., தோட்டக்கலைத் துறை இயக்குநர் பெ. குமாரவேல் பாண்டியன். இ.ஆ.ப., வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் முனைவர் இரா. முருகேசன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Read more:
விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!
PM kisan 17 வது தவணை: பிரதமரின் முதல் கையெழுத்து விவசாயிகளுக்காக!