நாட்டை உலுக்கி வரும் கொரோனா நோய்த் தொற்றால் கடந்த இரண்டு மாதங்களாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் உற்பத்தி முடங்கி இருக்கிறது. இதன் காரணமாக நாட்டில் பணப்புழக்கமும் குறைந்து உள்ளது.
இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவ்வப்போது மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இதனிடையே, மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வு வங்கியும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் குறைத்துள்ளது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் (Repo rate) 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைத்துள்ளது.. இதனால் வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன், வாகன கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.
இதேபோல், ரிசர்வ் வங்கியில் வங்கிகள் வைத்துள்ள வைப்புத்தொகைக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் (Reverse repo rate) 3.75 சதவீதத்திலிருந்து 3.35 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும் வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்காக வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள கடனுக்கான தவணை தொகையினை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதம் வழங்கப்பட்டு இருந்தது. இதை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
கடன் வாங்கியவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மாத தவணை தொகை பிடித்தம் செய்யப்படமாட்டாது. செலுத்தப்படாத தவணை தொகை வட்டியையும் சேர்த்து கடன் தொகையுடன் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும், ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், மாநிலங்களின் நிதி பிரச்சினையை சரி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சக்தி சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
வேளாண் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி நம்பிக்கை அளிக்கும் விதமாக இருப்பதாகவும், இந்தியாவில், மானாவாரி சாகுபடி பரப்பு 44 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நாட்டில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தொழில்துறை, கட்டுமானம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Daisy Rose Mary
Krishi Jagran