வெளிச்சந்தையில் கோதுமை, கோதுமை மாவு, அரிசி ஆகியவற்றின் சில்லரை விலை பணவீக்கத்தை குறைக்கும் வகையில் தனியார் கொள்முதல்தாரர்கள், வணிகர்கள். உற்பத்தியாளர்களுக்கு கோதுமை, அரிசி விற்பனை குறித்த அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்திய உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டலம் எஃப்ஏகியூ ரக கோதுமை, யுஆர்எஸ் ரக கோதுமை ஆகியவற்றை 15 கிடங்குகளிலிருந்தும், அரிசியை 18 கிடங்குகளிலிருந்தும் கொள்முதல்தாரர்கள் மற்றும் வணிகர்களுக்கு வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ், பதிவு செய்த மொத்த கொள்முதல்தாரர்கள், வணிகர்கள், கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியாளர்களுக்கு விடுவிக்கும்.
இந்திய உணவுக் கழகம் வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் மின்னணு ஏலத்தை http://www.valuejunction.in/fci என்ற தளத்தில் மேற்கொள்கிறது. கொள்முதல் குழுவில் உள்ள கொள்முதல்தாரர்கள், வணிகர்கள் மற்றும் ஆர்வமுள்ள கொள்முதல்தாரர்கள், வணிகர்கள் குழுவில் பதிவு செய்து எம்.ஜங்ஷனில் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். உணவுக் கழகத்தின் தமிழ்நாடு மண்டலம் 23.06.2023 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னணு ஏலத்தை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
10 மெட்ரிக் டன் முதல் அதிகபட்சமாக 100 மெட்ரிக் டன் வரை, கோதுமையை வாங்க விரும்பும் சிறு வணிகர்கள், நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் கலந்து கொண்டு, எஃப்ஏகியூ ரக கோதுமையை கிலோவுக்கு ரூ.21.50, யுஆர்எஸ் ரக கோதுமையை ரூ.21.25, அரிசியை கிலோவுக்கு ரூ.31 என்ற அடிப்படை விலையில் வாங்கலாம். மேலும் விவரங்களுக்கு www.fci.gov.in, or http://www.valuejunction.in/fci தளத்தை அணுகவும்.
சிறப்பு திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்:
விவசாயிகளுக்கான சிறப்புத் திட்ட அறிவிப்பு குறித்து 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வேளாண்துறை அமைச்சர்களுடன் ஒன்றிய ரசாயனம், உரங்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.
இந்தக் கூட்டத்தில் ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் உடனிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ரூ. 3,68,676.7 கோடி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி வரிகள் மற்றும் வேம்பு சேர்த்தல் கட்டணம் நீங்கலாக 45 கிலோ கிராம் யூரியா மூட்டை விவசாயிகளுக்கு ரூ.266.70-க்கு கிடைப்பதை உறுதிசெய்யும் மானியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2023-24 கரீஃப் பருவத்திற்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ. 38,000 கோடியும் இந்த சிறப்புத் திட்டத்தில் அடங்கும் என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார். இலை, தழைகள் மூலமான இயற்கை உரங்களை ஊக்கப்படுத்துவதற்கு சந்தை மேம்பாட்டு உதவியாக ரூ. 1,451.84 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
விவசாயத்திற்காகவும், விவசாயிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ள யூரியாவை தொழில்துறை போன்ற வேறு துறைகளுக்கு மாற்றப்படுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில அரசுகளை டாக்டர் மாண்டவியா கேட்டுக்கொண்டார்.
மேலும் காண்க:
சிலிண்டர் விலை உயர்வு முதல் வங்கி விதிகள் மாற்றம் வரை- ஜூலை முதல் நாளே இப்படியா?