News

Thursday, 18 May 2023 01:49 PM , by: Muthukrishnan Murugan

The Supreme Court dismissed the case seeking ban on Jallikattu competition

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாசாரத்தின் ஒரு பகுதி எனவும், அதனை தடை செய்ய இயலாது என இன்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதனால் தமிழக ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான ஜல்லிகட்டு போட்டுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இதுத்தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்றன.

போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த அப்போதைய அதிமுக தலைமையிலான தமிழக அரசு போட்டியினை அனுமதிக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய சட்டத்திருத்தத்தினை நிறைவேற்றியது. இதற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கிய நிலையில், அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்திற்கு தடை கோரி பீட்டா போன்ற அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். இந்த வழக்குத்தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன் அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு -

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தில் எந்த தவறும் இல்லை. ஜல்லிக்கட்டு கலாச்சார நிகழ்வா என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும். தமிழ்நாடு அரசு செய்துள்ள சட்டத்திருத்ததை முழுமையாக அமல்படுத்த வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 19, 21, 51A- வை தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் மீறவில்லை. ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு வளர்ப்போர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், ”தமிழர் தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.” என பதிவிட்டுள்ளார்.

pic courtesy: Theleaflet

மேலும் காண்க:

20 % TCS- கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு ஜூலை முதல் ஆப்பு !

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)