ஓய்வூதியம் தொடர்பான வழக்கில், வழக்குப்போட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கூறி, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
கடந்த 1995-ம் ஆண்டு, விருப்ப ஓய்வு பெற்றுவிட்ட வேணுகோபாலுக்கு, பல்வேறு தொழில்நுட்ப காரணங்களைக் காட்டி ஓய்வூதியம் வழங்க போக்குவரத்துத்துறை மறுத்து வந்துள்ளது. இதையடுத்து, தொழிலாளர் ஆணையத்தில் முறையிட ஆரம்பித்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி, அந்த உரிமையைப் பெற்றார் வேணுகோபால். ஆனாலும் 2009-ம் ஆண்டு வரையிலான ஓய்வூதிய நிலுவையைக் கொடுத்த போக்குவரத்துத்துறை, அதன்பிறகு தர மறுத்துவிட்டது.
மீண்டும் 2019-ம் ஆண்டு, உயர்நீதிமன்றப் படியேறியேனார் வேணுகோபால். இவ்வழக்கில், ஓய்வூதிய நிலுவைத்தொகையை போக்குவரத்துத்துறை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
தற்போது வேணுகோபாலுக்கு 75 வயதாகிவிட்டது. ஆனாலும், போக்குவரத்து துறை நிலுவை தொகையை தரமறுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே, இவருடைய ஓய்வூதிய உரிமை தொடர்பான பிரச்சினையில், உச்ச நீதிமன்றமே இறுதி உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், அவர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என்று தமிழக அரசு துணிச்சலாக வாதிடுவது தவறானது. இப்படி தேவையில்லாத விஷயங்களுக்கு தமிழக அரசு வழக்குப்போட்டு நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடிக்கிறது' என்று கூறிய நீதிபதிகள், தமிழக அரசுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதத்தையும் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: