இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் வேளாண் பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு சீரிய முயற்சிகளை வேளாண்மை-உழவர் நலத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள 79 இலட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கென தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை 2021-2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை இருமுறை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு பல உன்னத திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
முதன்மையான வேளாண் திட்டங்களான "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்", முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் மற்றும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் போன்றவை தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வை வளம்பெறச் செய்யும் திட்டங்களாகும்.
மேற்கண்ட திட்டப் பயன்களை விவசாயப் பெரு மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு வேளாண்மை-உழவர் நலத்துறையிலுள்ள அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
மேலும் திட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வித தொய்வுமின்றி செயலாக்க வேண்டியுள்ளதாலும், தொடர் கண்காணிப்பு தேவைபடுவதாலும், மாவட்டம் மற்றம் வட்டார அளவில் உள்ள வேளாண் அதிகாரிகளின் காலிப்பணிடங்கள் நிரப்பப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டு, தற்பொழுது வேளாண்மைத்துறையில் 23 துணை வேளாண்மை இயக்குநர்கள் வேளாண்மை இணை இயக்குநர்களாகவும், 40 வேளாண்மை அலுவலர்கள் வேளாண்மை உதவி இயக்குநர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க