News

Wednesday, 22 July 2020 07:38 AM , by: Elavarse Sivakumar

Credit: Deccan Chronicle

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், தொடர் சாரல் மழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் நீர்மட்டம் 114 அடியை எட்டுகிறது.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது முல்லைப் பெரியாறு அணை. பொதுவாக மே மாதம் கடைசி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரும்.

முதல் போக சாகுபடி

இதன் அடிப்படையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.ஆனால் இந்தாண்டு தென் மேற்கு பருவ மழை தொடக்கத்தில் குறைவாகப் பெய்தது. அதேநேரத்தில் ஜூலை 10ம் தேதிக்கு பிறகு, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

இதன் காரணமாக நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை 112 அடியாக இருந்த நீர்மட்டம், ஜூலை 11ம் தேதியன்று தான் 113 அடியாக உயர்ந்தது. அதன் பின் சாரல் மழை லேசாக அவ்வப்போது பெய்வதால், நீர்வரத்து சீராக வந்தது.

114 அடியை எட்டுகிறது (Reaching 114 feet)

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நீர் பிடிப்பு பகுதிகளில் மழை ஏற்பட்டு நீர்வரத்து விநாடிக்கு 610 கன அடியாக வந்தது. நீர் மட்டம் 113.80 அடியாக உயர்ந்தது. விரைவில் 114 அடியாக நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அணைப்பகுதி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

Credit: Deccan Herald

விவசாயிகள் கோரிக்கை (Farmers Demand)

கடந்த ஒரு வார காலமாக அணைப்பகுதியில் சாரல் மழை பெய்வது நீர்மட்டம் உயரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவேண்டும் என்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுவாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 118 அடிக்கு மேல் இருக்கும்போது மட்டுமே, நெல் சாகுபடிக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.

மேட்டூர் அணை

இதனிடையே கர்நாடகா அணைகளில் இருந்து, நீர்திறப்பு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடியாகும். அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு, 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 3,600 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. நீர்மட்டம் 68 அடியாக உள்ளது.

வீராணம் ஏரி

இதேபோல் சென்னை நகர மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகத் திகழும்  வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1,195 கனஅடி நீர் வரும் நிலையில் சென்னை குடிநீர் தேவைக்காக 58 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டுவதால், சிதம்பரம் வட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் என்ன இந்த வீராணம்  ஏரியால் சுமார் 44,856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.


மேலும் படிக்க...

நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!

ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)