தேனி மாவட்ட உழவர் சந்தையில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 18 வகையான காய்கறிகளை கொண்ட தொகுப்புப் பை விற்பனை செய்து வருகிறார்கள். அப்பகுதி மக்களிடையே இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவை அடுத்து அனைத்து இடங்களிலும் 3 அடி இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் போதும் பொதுமக்களின் அன்றாட தேவைக்கு பயன்படும் பால் மற்றும் காய்கறிகள் வாங்க அரசு அனுமதித்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பெரும்பாலான மாவட்டங்கள் உள்ள பேருந்து நிலையங்கள் காய்கறி சந்தைகளாக செயல்பட்டு வருகிறது.
தேனி மாவட்ட உழவர் சந்தை, தற்போது புதிய பேருந்துநிலையத்தில் சிறப்பாகவும் பிற மாவட்ட உழவர் சந்தைகளுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் மக்கள் 3 அடி இடைவெளியில் நின்று பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். உழவர் சந்தை நிர்வாகமும் மக்களின் நேரத்தையும், காய்கறிகளை வாங்குவதையும் எளிமை படுத்தும் பொருட்டு அன்றாடம் பயன்படுத்தும் 18 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்புப் பையை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
கத்திரிக்காய், தக்காளி, வெண்டை, அவரைக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், கேரட், கருவேப்பிலை, கொத்தமல்லி, எலும்பிச்சை, உருளை கிழங்கு, சின்ன/ பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கீரை, சௌசௌ, நூக்கல், முள்ளங்கி, வாழைக்காய் என மொத்தம் 18 வகையான பொருள்கள் ரூ.150 விற்பனை செய்யப்படுகிறது. இது ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தேனி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கூறும் போது, ``பொதுவாக உழவர் சந்தை என்பது விவசாயிகளால் நடத்தப்படுவது, அவர்கள் அன்றாடம் தங்களது தோட்டங்களில் விளைந்த புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு வந்து விற்பார்கள். பொதுமக்களும் அன்றாட தேவைக்கு மட்டும் காய்கறிகளை வாங்கி கொள்வார்கள். கரோனா மற்றும் ஊரடங்கு போன்ற காரணங்களினால் மக்களின் வருகை குறைந்துள்ளது. அவர்களின் பாதுகாப்பு மற்றும் நேரத்தை சேமிக்கும் பொருட்டு, விவசாயிகளின் துணையுடன் தினமும் பயன்படுத்தும் 18 வகையான பொருள்களைக் கொண்டு காய்கறித் தொகுப்புப் பையை தயார் செய்து, சோதனை முயற்சியாக 10 பைகளை மட்டும் விற்பனைக்காக வைத்திருந்தோம். இதனை பார்த்த மக்கள், விசாரித்துவிட்டு, ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதனால் நீண்ட நேரம் வரிசையில் நிற்பது குறைந்து, சந்தைக்குள் நுழைந்ததும் இந்த பையை மட்டும் வாங்கி செல்கின்றனர்” என்றார்.