1,மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 இந்திய மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றினை விடுவித்திட தூதரகத்தின் வழிமுறைகள் வழியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
2,ஆவின் பால் தட்டுப்பாடு! சோகத்தில் சென்னை மக்கள்
சோழிங்கநல்லூர் பால்பண்ணைப் பிரிவில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்னையால் ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் திங்கள்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் கே.ஏ.பொன்னுசாமி கூறுகையில், "பால் பண்ணையில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு கொண்டு செல்ல வேண்டிய பால், இன்று காலை 8 மணி வரை முகவர்களுக்கு வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
முகவர்களுக்கு பால் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால்,திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர் அடையாறு, பெசன்ட் நகர், வேளச்சேரி, மடிப்பாக்கம், பெருங்குடி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் வழக்கமான பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
"ஏற்கனவே, பல மாவட்டங்களில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னையும் இதே பிரச்சினையை எதிர்கொள்கிறது," என்று அவர் கூறினார், "அதிகாரிகளின் மெத்தனமான அணுகுமுறையே பிரச்சினைக்கு முக்கிய காரணம்" என்றார்.
பால் உற்பத்தி பிரச்னையை தீர்க்காத ஆவின் அதிகாரிகளின் அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சங்கம், மாநிலம் முழுவதும் பால் விநியோகத்தை முறைப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.
3, 24.92 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட CMWSSB கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.3.2023) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 24 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 1 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
4,தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் சிறிய அளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துவதற்கு இயக்க அறிவுறுத்தலின்படி திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம் & தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 17.03.2023 அன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கந்திலியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 25- க்கும் மேற்பட்ட முன்னனி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது. எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள எட்டாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் சார்ந்த (ITI & Diploma) முடிந்த ஆண்கள், பெண்கள் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
5,ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டம்- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய வேளாண் மாணவர்கள்
மதுரை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேர் கொண்ட குழு கொடை ரோடு பகுதியில் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தங்கி பயின்று வருகின்றனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவிலுள்ள கிராமங்களுக்கு சென்று பயிரை தாக்கும் நோய்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
இவர்களுள் ஒருவரான கண்ணன் என்கிற மாணவர் விலாம்பட்டி கிராமத்தில் சாய் அர்கா ஹெர்பிவாஷ் என்னும் இயற்கையாய் தயாரிக்கப்பட்ட பொடியை பற்றிய செயல்முறை விளக்கத்தை கடந்த சனிக்கிழமை அன்று விவசாயிகளுக்கு செய்து காட்டினார்.
இன்றைய காலகட்டத்தில் விவசாயத்துறையில் பூச்சிகொல்லி, களைகொல்லி, மற்றும் பல இரசாயன மருந்துகளை பயன்படுத்தும் காரணத்தினால் நம்முடைய உடலுக்கு தீங்கு ஏற்படுகின்றது. அதனை காய், பழங்களில் இருந்து அகற்ற ஹெர்பிவாஷ் பொடி உதவுகிறது. இது ICAR -IIHR பெங்களூரின் புதுமையான தயாரிப்பு ஆகும். இதில் இரசாயன பொருள்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை மற்றும் 100% பாதுகாப்பானது . தாவரங்களில் இருந்து பெறப்பட்ட ஒரு தூள்களிலிருந்து இந்த பொடி தயாரிக்கப்படுகிறது. இது ஒரு எளிய முற்றும் முற்றிலும் பாதுகாப்பான மூலிகை தயாரிப்பு ஆகும். 30 வினாடிகளில் 99% கிருமி நாசினிகளை இந்த பொடி நீக்குகிறது என்று அவர் விவரித்தார்.
6,கடலூரில் கால்நடை சார்ந்த பயிற்சி வகுப்புகள்
1) 21.03.2023 - கறவை மாடு வளர்ப்பு பயிற்சி,
2) 28.03.2023 -நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி ,
பற்றிய இலவச பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் பங்கு பெற 04142- 290249/ 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும். என்று இத்தகவலை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் பகிர்ந்துள்ளனர்.
7,Tree Bike உருவாக்கிய கர்நாடக விவசாயி: அதுவும் குறைந்த செலவில்!
கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா பகுதியை சேர்ந்தவர் கோமலே கணபதி பாட். இவருக்கு 51 வயதாகிறது. கடந்த 2019ம் ஆண்டு இவர் ஷெர்வின் மேபன் என்ற எஞ்சினியரிங் நிறுவனத்தின் உதவியுடன் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கியிருந்தார். மரங்களில் வேகமாக ஏறுவதற்கு இந்த கருவி உதவி செய்யும். எனவே பலரின் கவனத்தையும் இந்த கருவி ஈர்த்தது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கூட, இந்த கருவியால் ஈர்க்கப்பட்டிருந்தார்.
மரம் ஏறும் இந்த கருவியை இன்னும் நன்றாக மேம்படுத்தும்படி, கோமலே கணபதி பாட்டிற்கு நிறைய பேர் ஆலோசனைகளை வழங்கினர். அதைத் தொடர்ந்து விடா முயற்சி செய்து தனது கண்டுபிடிப்பை மெருகேற்றியுள்ளார் கோமலே. பல்வேறு சிறப்பம்சங்களை செய்து இப்போது 'ட்ரீ பைக்' என்ற பெயரில் அறிமுகம் செய்திருக்கிறார் அவர். தென்னை விவசாயம் செய்பவர்களுக்கு இந்த மரம் ஏறும் பைக் வரப்பிரசாதமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
இனி ஆதார் மட்டுமே போதும்: விரைவில் வரப் போகும் புதிய சேவை!
தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கையினை வெளியிட்டார் தமிழக முதல்வர்