There is no threat to northern state workers in Tamil Nadu
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல் காட்சிகளை தமிழ்நாட்டிலுள்ள வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவத்தொடங்கின. இதன் உண்மைத் தன்மை அறியாமல் வட இந்தியாவின் பிரபல ஊடகங்களும் தாக்குதல் காட்சியினை கொண்டு செய்திகளை வெளியிட்டன. இந்த சம்பவம் பீகார் மாநில சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. தமிழக அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் நடைப்பெறுகிற சதி என பலதரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தாக்குதல் சம்பவம் தமிழகத்தில் நடைபெறவில்லை எனவும், இதுபோன்ற காட்சிகளை தமிழகத்தில் நடைபெற்றதாக பரப்ப வேண்டாம் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் வீடியோ ஒன்றினை பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசனும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.
அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். அந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக் கரம் கொண்டு வரவேற்பது தான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்புத் தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள்.
தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர் பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
பூமி இன்னும் சூடாகுமோ? கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் 2022-ல் புதிய உச்சம்
சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிர்வாகம் தவறிவிட்டது- ஜி20 மாநாட்டில் மோடி உரை