தூத்துக்குடியில் உள்ள தினை விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தினை ஆண்டை (IYM2023) முன்னிட்டு சிறு தினை பயிர்களை ஊக்குவிக்க இந்திய அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. தினை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், சிறுதானியங்களின் மதிப்புக் கூட்டலுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.
கழுகுமலை அருகே ஜமீன் தேவர்குளத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் பங்கேற்று பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் பேசிய விவரங்கள் பின்வருமாறு-
கிராமங்களுக்கு வருவாய்த் துறை சேவைகளை வழங்குவதற்காக மாதந்தோறும் இரண்டாவது புதன்கிழமை அன்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. சர்வதேச தினை ஆண்டை (IYM2023) கருத்தில் கொண்டு, சிறு தினை பயிர்களை ஊக்குவிக்க இந்திய அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. "ஜமீன் தேவர்குளத்தை சுற்றியுள்ள விவசாய நிலம் மானாவாரியாகவும், துவரை பயிர்களுக்கு ஏற்றதாகவும் உள்ளதால் விவசாயிகள் சிறுதானிய பயிர்களை பயிரிடலாம். தினைக்கான கொள்முதல் விலையை மாநில அரசு உயர்த்த வாய்ப்புள்ளது. வேளாண்மைத்துறையும், தோட்டக்கலைத்துறையும் அரசின் திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைத்துள்ளார்கள்.
கயத்தார் எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு:
கோவில்பட்டி கடலை மிட்டாய். ஆத்தூர் வெற்றிலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு பெற்றதைப்போன்று கோவில்பட்டி. கயத்தார் பகுதியில் விளையும் எலுமிச்சைக்கும் புவிசார் குறியீடு பெறுவதற்கு நபார்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார். நடைப்பெற்ற இந்த மக்கள் தொடர்பு முகாமில் பொது மக்களிடமிருந்து 331 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
அதில் 194 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. பெறப்பட்டுள்ள அனைத்து மனுக்களுக்கும் அடுத்த 14 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்நிகழ்வில் 61 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, 19 பேருக்கு திருத்தப்பட்ட பட்டா, 19 பேருக்கு நலத்திட்ட உதவிகள், மூன்று பேருக்கு தையல் இயந்திரங்கள், நான்கு பேருக்கு மின் மோட்டார்கள் என 108 பயனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி ஆர்டிஓ (பொறுப்பு) கவுரவ்குமார், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், தென்காசி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேவி ராஜகோபால், ஜமீன் தேவர்குளம் ஊராட்சித் தலைவர் ராமசாமி மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் உட்பட அரசு உயர் அலுவலகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காண்க:
குடும்பத் தலைவிக்கான 1000 ரூபாய்- மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய அரசு