
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சமீபத்தில் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை பட்ஜெட் முக்கிய அம்சங்கள் குறித்து, வேளாண்மைத்துறை செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “கடந்த 2021-22 ஆம் ஆண்டு முதல் வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு 42 ஆயிரத்து 282 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் 45 ஆயிரத்து 661 கோடி, சுமார் 3 ஆயிரம் கோடி அதிகமாக வேளாண்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் பயிர்கள் உற்பத்தி திறன்:
வேளாண் பயிர்கள் உற்பத்தியில், அகில இந்திய அளவில் 2023-24ஆம் ஆண்டின் கணக்கின் படி தமிழ்நாடு கேழ்வரகு உற்பத்தில் முதலிடத்தில் உள்ளது. மக்காசோளம், எண்ணெய் வித்துகள், கரும்பு, மரவள்ளி, புளி, மல்லிகை, கிராம்பு, கறிவேப்பிலை, ஜாதிக்காய், மஞ்சள், செவ்வந்தி ஆகியவை உற்பத்தியில் 2ஆம் இடத்தில் உள்ளது. தொடர்ந்து, மூன்றாம் இடத்தில், நிலக்கடலை, குறுந்தானியங்கள், தேங்காய் உற்பத்தி உள்ளது. இது ஆண்டுதோறும் மாற்றம் அடையும்.
அதிகரித்துள்ள சாகுபடி பரப்பு :
2019-2020 ஆம் ஆண்டில் 146.77 லட்சம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடிப் பரப்பு, 2023-24 ஆம் ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 29.74 லட்சம் ஏக்கராக இருந்த இருபோக சாகுபடிப் பரப்பு தற்போது 33.60 லட்சம் ஏக்கர் என்ற அளவினை எட்டியுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் 89.09 லட்சம் ஏக்கராக இருந்த பாசனம் பெற்ற சாகுபடிப் பரப்பு, 2023-24 ஆம் ஆண்டில் 94.68 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
உழவர் நலன் சார்ந்த திட்டங்கள், இயற்கை வேளாண்மை, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, வேளாண் பணிகளை இயந்திரமயமாக்குதல், வேளாண் விளைபொருட்களில் இழப்பைக் குறைத்து மதிப்புக்கூட்டுதல், புதிய சந்தை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குதல், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ற வேளாண்மைக்கான திட்டங்களும் இடம் பெற்றுள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக விவசாயம் எவ்வாறு பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வருகிறது. கலைஞர் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 46 ஆயிரம் தரிசு நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை:
உயர் மதிப்பு கொண்ட சந்தனம், செம்மரம், மகோகனி, ஈட்டி போன்ற மரங்களை விவசாயிகள் வளர்க்கலாம். மரங்களை வளர்க்கும் மரங்களை பதிவு செய்தல், வெட்டுதல், விற்பனைக்கு எடுத்துச்செல்லுதல் போன்ற அனைத்து நடைமுறைகளை எளிதாக்க தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை உருவாக்கப்பட்டு வெளியிடப்படும்.
விவசாயிகளுக்கான பயிர்கடன் தள்ளுபடி 2021 ஆம் ஆண்டில், ரூ. 12 ஆயிரம் கோடி தள்ளுப்படி செய்யப்பட்டது. அதன்படி, ரூ. 10 ஆயிரம் கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கான தவணைத் தொகை ரூ.1,477 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பனை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ரூ.165 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சம் பனை விதைகள் வழங்கப்பட்டு நடவு செய்யப்பட உள்ளது. பனை பொருட்களில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால், பனை மரத்தில் இருந்து கள் இறக்குவது அரசின் கொள்கை முடிவு'' என தெரிவித்தார்.
Read more:
மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்! தூங்கும் மத்திய அரசு, வெகுண்டெழுந்த மீனவர்கள்
சீறிப் பாய்ந்து தண்ணீர் ஓடிய வெண்ணாறு பொலிவிழந்து வரும் அவலம்