சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற கிராமப்புறங்களிலும், நகர்ப்புற குடிசைப் பகுதிகளிலும் வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெறும் பங்காற்றி வருகின்றன.
சுய உதவிக் குழுக்கள் - Self-Help Groups
இன்றைய அளவில் தமிழ்நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுக்களில் உள்ள பெண்கள், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், சிறுதொழில் செய்யவும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு - Corona
கடந்த 2019 பிப்ரவரி முதல் கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டது. தமிழ்நாடும் இதன் பாதிப்புக்கு உள்ளாகி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, தேவைப்படும் தளர்வுகளுடன் அது தொடர்ந்து அமலில் உள்ளது. நோய்த் தொற்றாலும், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் சிரமங்களை குறைக்க, நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, பருப்பு போன்றவை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வழங்கியதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரொக்க உதவியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ உதவிகளையும் மாண்புமிகு அம்மாவின் அரசு வழங்கியது.
கடன் தள்ளுபடி
இந்நிலையில், கொரோனா தொற்று காலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், சுய உதவி குழுக்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற கடனை திரும்ப செலுத்த இயலாத நிலை உள்ளதாகவும், அவர்களின் துயரை துடைக்க தமிழ்நாடு அரசு தங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகள் வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்றத் தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!