2022-2023 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 87 லட்சம் குடும்பங்களுக்கு நிதியுதவியாக கூட்டுறவுத் துறை ரூ.68,000 கோடியை வழங்கியுள்ளது. இதில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு என 20 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.15,000 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் நியாய விலைக் கடைகளை சீரமைக்கும் பணியையும் கூட்டுறவுத் துறை மேற்கொண்டது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தல் மற்றும் புதிய கடன்களை விவசாயிகளுக்கு வழங்குதல் ஆகியவை கிராமப்புற விவசாயிகள் தனியாரிடம் அதிகளவிலான வட்டிக்கு இரையாவதைத் தடுக்க உதவியுள்ளன.
2022-23 ஆம் நிதியாண்டில் தமிழக கூட்டுறவு வங்கியின் செயல்பாடு:
TN கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள்
- மொத்த டெபாசிட்- ரூ.72,000 கோடி
- மொத்தக் கடன்கள்- ரூ.68,000 கோடி (எப்போதும் இல்லாத அளவு)
- தங்கக் கடன்- ரூ.37,058 கோடி
- விவசாயக் கடன்கள்- ரூ. 13,443 கோடி (17.43 லட்சம் விவசாயிகள்)
- எஸ்சி/எஸ்டி விவசாயிகள்- ரூ.1,073 கோடி
- கால்நடை வளர்ப்புக் கடன்கள்- ரூ. 1,339.88 கோடி (2.86 லட்சம் விவசாயிகள்)
- சுயஉதவி குழுக்கள்- ரூ.1,597 கோடி
- மற்ற கடன்கள்- ரூ.11,630 கோடி
தள்ளுபடி செய்யப்பட்ட மற்ற கடன் விவரம்:
- 13.12 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.5013.33 கோடி- தங்கக் கடன்
- 16.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.12,489 கோடி- விவசாயக் கடன்கள்
- 15.8 லட்சம் பெண்களுக்கு ரூ.2,755.99 கோடி -SHG (சுய உதவிக்குழுக்கள்) கடன்கள்
கூட்டுறவு வங்கி வருவாயை PDS-க்கு பயன்படுத்தக்கூடாது:
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, “டெல்டா பகுதியில் 40 சதவீதம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், இப்பகுதிக்கு ரூ.1,200 கோடி மட்டுமே கடன் கிடைத்துள்ளது, இது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட மொத்த பயிர்க் கடனில் வெறும் 10% மட்டுமே. சுமார் 90% விவசாயிகள் இன்னும் தனியார் பணக்கடன் வழங்குபவர்களை நம்பியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய கூட்டுறவு வங்கி இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கூட்டுறவு வங்கி இல்லை. மேலும், கூட்டுறவு வங்கிகள் விவசாயிகள் உட்பட அதன் உறுப்பினர்களால் நிதியளிக்கப்படுவதால், அதன் வருமானத்தை நியாய விலைக் கடைகள் நடத்துவதற்கு செலவிடக்கூடாது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை நியாய விலை கடை ஊழியர்களின் சம்பளம் வழங்க பயன்படுத்தக்கூடாது” என்றார்.
குறைந்த விலையில் விவசாய உபகரணங்கள் :
“உபகரணங்கள் இல்லாத அல்லது இயந்திரங்கள் பழுதடைந்துள்ள சிறு விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவதற்கோ அல்லது தனியாரிடம் வாடகைக்கு எடுப்பதற்கோ கணிசமான முதலீடுகளைச் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் கடன் சங்கங்களின் ஆதரவை குறைந்தபட்ச விகிதத்தில் பெற முடியும்” என்று கூட்டுறவு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.
விவசாயிகளின் வருவாயை மேம்படுத்த, 4,478 கிராம அளவிலான வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல சேவை மையங்களாக மாற்ற கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. விவசாயக் கடன் வழங்குவதில் முதன்மையாக ஈடுபட்டுள்ள கடன் சங்கங்கள், விவசாய இடுபொருள் செலவுகளைக் குறைப்பதில் விவசாயிகளுக்கு உதவ தொழில்நுட்ப, தளவாட மற்றும் உபகரண ஆதரவை வழங்க இது உதவும். நபார்டு கடன் மூலம் இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டில் சுமார் 2,000 பல சேவை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய மையங்கள் வேளாண் சேவை மையங்களாக செயல்படுவதோடு, டிராக்டர்கள், பவர் டில்லர்கள், அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் பேலர்கள், பல தானியங்கள் துடைக்கும் இயந்திரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பான்கள் மற்றும் தளவாட வாகனங்களை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கும்.
மேலும் காண்க:
பெண்களுக்கான MSSC scheme- எவ்வளவு முதலீடு செய்யலாம்? வட்டி என்ன?