தமிழ்நாடு சட்டசபை தேர்தலையொட்டி நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, அனைத்து பகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களும் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலை கிராமங்களில் கழுதைகள் மூலமாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளைக் காலை 7மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தல் களத்தில் திமுக, அதிமுக, மநீம, அமமுக தலைமையில் நான்கு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகின்றன. இது தவிர சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
பதற்றமான வாக்குசாவடிகள்
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 10,830 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
EVM-ல் பெயர் சின்னம் ரெடி
கடந்த வாரம் முழுவதும் வேட்பாளர்கள் பெயர் சின்னங்கள் பொறிக்கும் பணி நடந்து முடிந்தது. பின்னர் அவைகள் தொகுதி, பாக வாரியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் இன்று அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
EVM அனுப்பும் பணி தீவிரம்
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,20,807 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு பணிக்கு 300 துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
6.26 கோடி பேர் வாக்களிக்க காத்திருப்பு
இந்தத் தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18, 28,727 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் இன்று மாலைக்குள் 234 தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு விடும். நாளை காலைக்குள் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும்படி ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.