தமிழகம் கர்நாடகா இடையே காவிரி பிரச்னை 50 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பல வருடங்களாக காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. குறிப்பாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 60 டிஎம்சி நீரை தேக்கி வைக்கும் வகையில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது.
பெங்களூரு நகரில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்கவே மேகதாதுவில் அணை கட்டப்படுவதாகவும், கர்நாடகாவை விட தமிழகத்திற்குதான் இதனால் அதிக நன்மை என்றும் தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆனால், தண்ணீர் இருக்கும் போது திறந்துவிட மறுக்கும் கர்நாடகா, மேகதாது அணை கட்டினால் கொஞ்சம் கூட திறக்காது என்பதால் அதற்கு தமிழகம் இசைவு தெரிவிக்கவில்லை.
மேகதாது அணை கட்டுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. ஆனால், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உறுதியாகக் கூறி வருகிறார். அதே சமயம் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் ஒரு செங்கல்லை கூட மேகதாதுவில் கர்நாடகா வைக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்.
இந்த நிலையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படுவதால் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் உரிமை பறிக்கப்படுகிறது என்று கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இன்று போராட்டம் நடத்தினர். என்எல்சி 2வது அனல் மின் நிலையம் முன்பு கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்று முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், கையில் பூட்டு மற்றும் சங்கிலியுடன் ஊர்வலமான சென்ற விவசாயிகள் அனல் மின் நிலையத்திற்கு பூட்டு போட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், விவசாயிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் நெய்வேலியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மேகதாது அணை விவகாரம் விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. தமிழகம் - கர்நாடகா என இரு தரப்பும் வலுவான வாதங்களை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more:
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்