தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. ரேங்க் பட்டியலில், மூன்று மாணவர்கள் 200/200 கட்- ஆஃப் மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.
தரவரிசை பட்டியலை வெளியிட்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், ”18 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் 14 இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு 41,434 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3,000 விண்ணப்பங்கள் அதிகம். விண்ணப்பித்தோர் சதவீத அடிப்படையானது 37% - ஆண்கள் மற்றும் 63% பெண்கள். அதில், 36,612 விண்ணப்பதாரர்கள் தரவரிசைக்கு தகுதி பெற்றுள்ளனர்” என்றார்.
மூன்று மாணவர்கள் 200-க்கு 200 கட்- ஆஃப்:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் மூன்று மாணவர்கள் 200/200 என்கிற கட்- ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மேலும், 15 மாணவர்கள் 199.50/200 கட்- ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 479 விண்ணப்பதாரர்கள் 195/200-க்கு மேல் கட்-ஆஃப் பெற்றுள்ளதாகவும், 1,662 விண்ணப்பதாரர்கள் 190-க்கு மேல் கட்-ஆஃப் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த ஜி.திவ்யா, மதுரையைச் சேர்ந்த ஸ்ரீராம், தென்காசியைச் சேர்ந்த எஸ்.முத்துலட்சுமி ஆகியோர் அதிக கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சிறப்பு ஒதுக்கீட்டுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் ஜூன் 30-ஆம் தேதியும், பொது ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்திலும் தொடங்கும். முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கும். பொதுவான இணையதளம் மூலம் வேளாண் மற்றும் மீன்வள கல்விக்கான விண்ணப்பங்களைப் பெற்றாலும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்திற்கு தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் 2022-2023 கல்வியாண்டுக்கான பட்டமளிப்பு விழா ஜூலை மாதத்திற்குள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் சுமார் 10,887 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தாய்மொழியான தமிழ் மொழியில் கல்வி பயில 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களுக்கு மொத்தம் 9,997 பேர் விண்ணப்பித்துள்ளனர். முன்னாள் இராணுவ வீரர்களின் இடஒதுக்கீட்டில் 309 பேரும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 128 மாணவர்களும், விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் 790 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு மவுசு குறைந்துள்ள நிலையில், பல்வேறு மாணவர்களும் இன்ஜீனியரிங்க் படிப்புகளுக்கு மாற்றாக வேளாண் துறையில் இணைய பல்வேறு மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். www.tnau.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்களின் தரவரிசைப் பட்டியலைப் பார்க்கலாம்.
மேலும் காண்க:
புரூசெல்லோசிஸ் 2-வது தவணை தடுப்பூசி- கால்நடை விவசாயிகளுக்கு அழைப்பு!