தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குமார் கடந்த 2020ம் ஆண்டிற்கான சிறந்த துணைவேந்தருக்கான விருதினை பெற்றுள்ளார்.
சிறந்த துணைவேந்தருக்கான விருது
பேராசிரியர் ஜெயசங்கர் தெலுங்கானா மாநில வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து இந்திய வேளாண் மாணவர்கள் சங்கம், புது தில்லி ஏற்பாடு செய்திருந்த ஆறாவது தேசிய இளைஞர் மாநாட்டில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குமார் அவர்களுக்கு 2020ம் ஆண்டிற்கான சிறந்த துணைவேந்தருக்கான விருது வழங்கபட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக பொறுப்பேற்ற முனைவர் குமார் அவர்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதில் முழு ஆர்வம் காட்டியுள்ளார். இவர்தம் துண்டுதலின் பலனாக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்திய அகில இந்திய நுழைவுத் தேர்வு 2020ல், 589 இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று பல்வேறு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காக சேரமுடிந்தது.
சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் புரிந்துணைர்வு ஒப்பந்தங்களை நிறைவேற்றியதின் மூலம் வேளாண் கல்வியைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தியுள்ளார். மேலும், அதிக அளவிலான சர்வதேச மாணவர்களை ஈர்த்ததன் மூலம், மாணவர்களின் பன்முகத்தன்மையை அதிகரிக்க முடிந்தது.
துணைவேந்தரின் முயற்சிகள்
இளம் விஞ்ஞானிகளுக்கு ஒன்பது தனிப் பட்டறைகள் நடத்தி, புதிய திட்டங்கள் தயாரித்தல் மற்றும் நிதி பெறுதல் போன்றவற்றை ஊக்குவித்துள்ளார். வெளி நிதி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட நிதியானது ரூ 57 கோடியை 2020ல் எட்டியுள்ளது. இது சுமார் ரூ 19 கோடியாக 2018ல் இருந்தது.
தாய்நாடு சார்ந்த மரம் நடவு, விதைப் பந்துகள் விதைத்தல், வேளாண்மையில் ட்ரோன்கள், சென்சார்கள், தொலையுணர் சாதனங்கள் உதவியுடன் பயிர் இழப்பு மதிப்பீடு, போர்க்கால அடிப்படையிலான பூச்சி மற்றும் நோய் பிரச்சனைகளைக் களைதல், விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேம்பட்ட விதை மற்றும் நாற்று உற்பத்தி போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இப்பல்கலைக்கழகம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திலிருந்து தனியாக ரூ.30 கோடி நிறுவன மேம்பாட்டுத் திட்டத்திற்காக பெறப்பட்டு அடுத்த கட்ட இலக்கை நோக்கி சென்று கொண்டு உள்ளது.
8ம் இடத்திற்கு முன்னேறிய பல்கலை.,
மேற்கூறப்பட்ட சீரிய முயற்சிகளின் காரணமாகவும், பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஏற்றமிகு படைப்புகளாலும், இப்பல்கலைக்கழகம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக தர வரிசைப்பட்டியலில் 33ம் இடத்திலிருந்து 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மேலும் படிக்க...
நவரை போகத்திற்கு நெல் விதைகள்! - 15ம் தேதி வரை மானிய விலையில் பெறலாம் - விவசாயிகளுக்கு அழைப்பு!
வேளாண் சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றம்!