தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாகவும், நிலத்தடி நீர் மட்டம் குறைவதும் இயல்பானது. கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாடு, நிலம் வறண்டு போகுதல், வேளாண்மைக்கு போதிய நீர்ப்பாசனமின்மை என பல சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. நடப்பாண்டில் இதுவரை, ஒரேயொரு நாள் மட்டும் கனமழை பெய்துள்ள நிலையில், இனி வரும் கோடை மழை, உழவுக்கு கைகொடுக்குமா என கோவை மாவட்ட வேளாண் பல்கலை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு கோடை மழையும், அதை தொடர்ந்து பெய்த பருவமழையின் பயனாக, அனைத்து நீர்நிலைகள் நிரம்பின. வேளாண்மை செழிக்கவும், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கவும் கடந்தாண்டு பெய்த மழை பேருதவியாக இருந்தது.
இவ்வாண்டில் இதுவரை ஜனவரி 19 மற்றும் மார்ச் 21 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே மழை பதிவாகியுள்ளது. பொதுவாக கோவையில் பெய்யும் மொத்த மழைப்பொழிவில், குளிர்கால மழை வெறும் 23 மி.மீ., ஆனால் இந்தாண்டு, வெறும் 0.5 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது என்பதால் விவசாயிகள் கோடைமழையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.