தமிழகத்தில் செயல்படும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. தற்போது, ஆணையத்தின் தலைவராக சந்திரசேகர் உள்ளார். மேலும் உறுப்பினர்களாக வெங்கடசாமியும் ஜெரால்டு கிஷோர் என்பவர்களும் உள்ளனர். இந்நிலையில் உறுப்பினர் ஜெரால்டு கிஷோர் ராஜினாமா செய்ததையடுத்து, அந்த பதவி காலியாக உள்ளது. மேலும் மற்றொரு உறுப்பினராக வெங்கடசாமி அடுத்த வாரம் ஓய்வு பெற இருக்கிறார்.
மேலும் இந்த ஆணையம் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின் வாரிய செயல்பாட்டை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. இந்த ஆணையத்திடம், மின் வாரியம் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் மொத்த வருவாய் தேவை மற்றும் மின் கட்டணம், வரவு, செலவு உள்ளிடவற்றை அறிக்கையாக கொடுக்க வேண்டும்.அந்த அறிக்கை அடிப்படையில் மின் கட்டணம் உயர்வு மற்றும் குறைப்பு உள்ளிட்ட மாற்றங்களை மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொள்ளும். குறிப்பாக மின்வாரியம் அளிக்கும் அறிக்கையில் , குறிப்பிடப்பட்டு நடப்பு நிதியாண்டின் மின் வாரிய வரவு, செலவு விபரங்களை கொண்டு மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறாது.
அதன்படி, வருவாயை விட, செலவு குறைவாக இருந்தால் மின் கட்டணம் குறைக்கப்படும். இல்லையெனில், பழைய கட்டணமே தொடர அனுமதிக்கப்படும். வரவை விட செலவு அதிகம் இருந்தால், மின் கட்டணம் உயர்த்த முடிவு செய்து, புதிய மின் கட்டணம் அமல்படுத்தப்படும். முந்தைய அதிமுக ஆட்சியில் மக்களவை, ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர் தோல்விகளால், மின் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தும் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மின் வாரியம், 2018 - 19 முதல் முந்தைய நிதியாண்டு வரை, ஆணையத்திடம் மின் கட்டண உயர்வு மனுவை சமர்ப்பிக்காமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், நிலக்கரி கொள்முதல், மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு புதிதாக கடன் வழங்க, மத்திய அரசு தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. எனவே, மின் வாரிய நிதி நெருக்கடியை சமாளிக்க, மின் கட்டணத்தை உயர்த்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் கட்டண உயர்வு கோரிக்கை மனுவை மின் வாரியம் பல ஆண்டுகளாக சமர்ப்பிக்காமல் இருப்பதால், ஆணையமே தன் அதிகாரத்தை பயன்படுத்தி உயர்த்தலாமா என்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இரு உறுப்பினர் பதவிகளுக்கும் புதிய நபர்களை நியமிக்க, பொறியியல், சட்டம், பொருளாதாரம் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக, எரிசக்தி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது தவிர, ஆணையத்தின் செயலர் பதவிக்கும் புதிய நபரை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.மேலும் சட்டப்பேரவை இந்த மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்த தேர்தலும் இல்லை என்பதாலும் மின் கட்டணம் உயர்த்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.அதற்காக தான் ஆணையத்தில் காலியாக உள்ள முக்கிய பதவிகள் விரைந்து நிரப்பப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க