குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? அப்படி எதிர்பார்ப்பவர்களின் தேவைக்காகத் திருத்தம் செய்யும் வாய்ப்பை டிஎன்பிஎஸ்சி மீண்டும் வழங்கியுள்ளது. அவ்வாறு திருத்தம் செய்துகொள்ள, மார்ச் 23 வரை காலக்கெடு வழங்கி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளுக்கான ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி மாதம் 23ம் தேதி தொடங்கியது. மேலும், இந்த தேர்வுக்கு இம்மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மார்ச் 23ம் தேதிவரை
இந்நிலையில், இதுவரை இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களில் பலர் விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த பிறகு, சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்துவிட்டதால், அந்தத் தவறுகளை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தேர்வாணையத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.இது தொடர்பாகப் பரிசீலனை செய்த தேர்வாணையம், விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ள மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதிவரை விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை திருத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (EDIT) செய்ய விரும்பும் தேர்வர்கள் கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இணையவழி விண்ணப்பத்தில் உள்ள தகவல்களில், ஒரு சில தகவல்கள் தேர்வரின் ஒருமுறை நிரந்தரப்பதிவில் (OTR)இருந்து முன்கொணரப்பட்டவை (எடுத்துக் கொள்ளப்பட்டவை). அவ்வாறான தகவல்களை திருத்தம் செய்வதற்கு முதலில் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவில் (EDIT PROFILE) சென்று உரிய திருத்தங்களைச் செய்து அவற்றைச் சேமிக்கவும்.
அதன்பிறகு, விண்ணப்பத்திற்கு எதிரே உள்ள EDITல் சென்று, விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய விரும்பும் விவரங்களை திருத்தம் செய்து, இறுதியாக சேமித்து, அதனை சமர்ப்பித்து (SUBMIT), அதற்குரிய நகலினை அச்சுப் பிரதி (Print Out)எடுத்துக் கொள்ளவும்.விண்ணப்பத்தில் திருத்தம் செய்த பிறகு, திருத்தப்பட்ட விவரங்களை இறுதியாக சேமித்து சமர்பிக்கவில்லை என்றால், தேர்வர் இதற்கு முன்பு சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
திருத்தம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், உரிய தேர்வுக் கட்டணத்தை இணைய வழியாக செலுத்தவும். ஏற்கனவே செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை- கல்வித்தகுதி பட்டப்படிப்பு!
பொதுத் தேர்விற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு- மாணவர்களுக்கு Happy news!